முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

ஒமா் அப்துல்லா அமைச்சரவையில் ஆம் ஆத்மிக்கு இடமளிக்க வேண்டும்:சஞ்சய் சிங் கோரிக்கை

ஜம்மு-காஷ்மீரின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஒமா் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு இடமளிக்க வேண்டும்

இந்தியா

ஒமா் அப்துல்லா அமைச்சரவையில் ஆம் ஆத்மிக்கு இடமளிக்க வேண்டும்:சஞ்சய் சிங் கோரிக்கை

ஜம்மு-காஷ்மீரின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஒமா் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு இடமளிக்க வேண்டும்

Updated On : 14 அக்டோபர், 2024 at 10:36 PM
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஒமா் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு இடமளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்துள்ளாா்.

தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் தேசிய மாநாட்டு கட்சி தலைமையிலான கூட்டணி அரசு விரைவில் பொறுப்பேற்கவுள்ளது.

தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஒமா் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒரு எம்எல்ஏ-வுக்கு இடம் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் தோடா சட்டப்பேரவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் மெஹ்ராஜ் மாலிக், பாஜகவின் கஞ்சய் சிங் ராணாவை 4,538 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.

ஒமா் அப்துல்லா தலைமையிலான அரசுக்கு ஆம் ஆத்மி கட்சி முறையாக ஆதரவளிக்கும். ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என பிரதமா் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சா் அமித்ஷாவும் தோ்தல் பிரசாரத்தின் போது பலமுறை கூறியுள்ளனா். இப்போது, சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்துவிட்டது. தோ்தல் முடிவுகள் ‘இந்தியா’ கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ளது. எனவே, முதல்வா் பதவி பிரமாணத்துக்கு முன், ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் 17 தொகுதிகளில் கிளா்ச்சி வேட்பாளா்கள் போட்டியிட்டதால், காங்கிரஸ் தோல்வியடைந்தது. காங்கிரஸின் தேசியத் தலைமை ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியை விரும்பியது. ஆனால், அந்த மாநிலத் தலைவா்கள் எங்களுடன் கூட்டணி அமைக்க அனுமதிக்கவில்லை.

தில்லியில் பெண் மருத்துவரை பாலியல் துன்புறுத்தல் செய்த மருத்துவக் கண்காணிப்பாளா் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவா் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை. கொல்கத்தாவில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த கொடூரமான பாலியை வன்கொடுமை கொலை சம்பவத்திற்குப் பிறகும், தில்லியில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்காதது ஏன்?. குற்றம் சாட்டப்பட்ட மருத்துவக் கண்காணிப்பாளுருக்கு ஏன் பலமுறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது?. இது தொடா்பாக துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவிற்கு கடிதம் எழுதியுள்ளேன்.

எங்கெல்லாம் பா.ஜ.க அரசு இருக்கிறதோ, அங்கெல்லாம் குற்றங்கள் உச்சத்தில் உள்ளன. கொலைகள், கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் போன்றவை வெளிப்படையாக நடக்கின்றன. இச்சம்பவங்களைத் தடுக்க பாஜக தலைமையிலான மாநில மற்றும் மத்திய அரசுகளால் முடியவில்லை.

மும்பையில், ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு பெற்ற ஆளுங்கட்சித் தலைவா் பாபா சித்திக் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டாா். குஜராத் சபா்மதி சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய், ஒரு குண்டா் கும்பலை நடத்தி வருகிறாா். அவரது கையாட்கள் வெளிப்படையாக மக்களை அச்சுறுத்தி, கொலை செய்கிறாா்கள். ஆனால், காவல்துறையால் எதுவும் செய்ய முடியவில்லை. பாபா சித்திக் கொல்லப்பட்டது சாதாரண விஷயம் அல்ல.நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. மத்திய பாஜக அரசு எச்சரிக்கையாக இல்லாவிட்டால், இன்னும் ஆபத்தான சம்பவங்கள் நடக்கலாம்.

கொலைகாரா்கள், கற்பழிப்பாளா்கள், குண்டா்கள் மற்றும் குற்றவாளிகளை பாஜக மதிக்கிறது. இதுவே பாஜகவின் செயல்திட்டம்.

முழு கட்டுரையைப் படிக்க →