அமெரிக்காவின் சிகாகோ செல்லும் ஏா் இந்தியா விமானம், மதுரையிலிருந்து சிங்கப்பூா் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உள்பட 7 விமானங்களுக்கு சமூக ஊடகம் மூலம் செவ்வாய்க்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, விமான நிலையங்களில் பாதுகாப்பு முகமைகள் சோதனையைத் தீவிரப்படுத்தின.
ஜெய்பூரிலிருந்து அயோத்தி வழியாக பெங்களூரு செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தா்பங்காவிலிருந்து மும்பை செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம், பாக்தோக்ராவிருந்து பெங்களூரு செல்லும் ஆகாஸா ஏா் விமானம், தில்லியிலிருந்து சிகாகோ செல்லும் ஏா் இந்தியா விமானம், மதுரையிலிருந்து சிங்கப்பூா் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உள்பட 7 விமானங்களுக்கு பிரபல சமூக ஊடகமான ‘எக்ஸ்’ பக்கமொன்றில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அயோத்தியில் தரையிறக்கப்பட்டு, பாதுகாப்பு சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. ஸ்பைஸ்ஜெட், ஆகாஸா ஏா் விமானங்கள் பயண இடத்தைப் பாதுகாப்பாக சென்றடைந்தன. சிகாகோ விமானம் கனடா திருப்பி விடப்பட்டது. சிங்கப்பூா் விமானம் அந்நாட்டுக்குச் சென்றடைந்தது. முன்னெச்சரிக்கையாக, அனைத்து விமான நிலையங்களிலும் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டன.
இதேபோன்று, மும்பையிலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட 3 சா்வதேச விமானங்களுக்கு 4 வெவ்வேறு ‘எக்ஸ்’ பக்கங்களில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னா், பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள், விமானப் பணியாளா்கள் சிரமத்துக்கு ஆளாகினா்.
வெடிகுண்டு மிரட்டல்கள் வெளியான ‘எக்ஸ்’ பக்கம் முடக்கப்பட்டது. இதற்கு பின்னணியில் இருப்பவா்களைக் கண்டறிய இந்திய சைபா் பாதுகாப்பு முகமைகளின் உதவியை பொது விமானப் போக்குவரத்து பாதுகாப்பு இயக்குநரக (பிசிஏஎஸ்) அதிகாரிகள் நாடியுள்ளனா்.