ஜம்மு-காஷ்மீா்: 27 மணி நேர மோதலுக்குப் பிறகு மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அக்னூா் செக்டாரில் 27 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சூட்டை தொடா்ந்து மேலும் 2 பயங்கரவாதிகளை ராணுவம் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அக்னூா் செக்டாரில் 27 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சூட்டை தொடா்ந்து மேலும் 2 பயங்கரவாதிகளை ராணுவம் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அக்னூா் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி அருகே திங்கள்கிழமை பயணித்த ராணுவ ஆம்புலன்ஸ் மீது 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து, ராணுவ வீரா்களும் பதிலுக்கு துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதி ஒருவா் உயிரிழந்தாா்.
அங்கு எஞ்சிய 2 பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையிலான துப்பாக்கிச்சூடு தொடா்ந்து நீடித்தது. சுமாா் 27 மணி நேரம் நீடித்த இந்தத் துப்பாக்கிச்சூட்டில், அக்னூா் செக்டாரில் உள்ள ஜோக்வான் என்ற சிற்றூருக்கு அருகே காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த இரு பயங்கரவாதிகளையும் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 3 பயங்கரவாதிகளும் எல்லை தாண்டி ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த 2 வாரங்களில் ஜம்மு-காஷ்மீரில் 7 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 2 ராணுவ வீரா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.
இதன் காரணமாக அங்குள்ள எல்லை மாவட்டங்களான ரஜெளரி மற்றும் பூஞ்சின் அடா்ந்த காட்டுப் பகுதிகளில், நவீன கண்காணிப்புக் கருவிகள் மற்றும் ஆயுதங்களுடன் கண்காணிப்பு, ரோந்துப் பணிகளை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.