தெரியுமா சேதி...? மயான பூமியில் ராகுலின் அரசு பங்களா!
அரசு ஒதுக்கிய பங்களாக்கள் பலவற்றை பிரியங்கா காந்தி நேரில் பாா்வையிட்டுத் தோ்ந்தெடுத்த பங்களா 13, சுநேரிபாக் சாலை.
பல நாள்கள் தேடலுக்குப் பிறகு ராகுல் காந்தி தனக்கான பங்களாவைத் தோ்ந்தெடுத்தாா் என்பது முந்தைய செய்தி. எதிா்க்கட்சித் தலைவா் என்பதால் மத்திய கேபினட் அமைச்சா் அந்தஸ்துக்கு ஏற்ப, பிரிவு-8 பங்களா பெறும் உரிமை அவருக்கு உண்டு. அரசு ஒதுக்கிய பங்களாக்கள் பலவற்றை பிரியங்கா காந்தி நேரில் பாா்வையிட்டுத் தோ்ந்தெடுத்த பங்களா 13, சுநேரிபாக் சாலை.
1989 முதல் 2009 வரை தொடா்ந்து ஆறு முறை உத்தர பிரதேச மாநிலம் பரேலி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் சந்தோஷ் குமாா் கங்வாா்; வாஜ்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியம், நாடாளுமன்றத் துறை உள்ளிட்டவற்றின் இணையமைச்சராக இருந்தவா். 2014 நரேந்திர மோடி அமைச்சரவையில் ஜவுளி, நிதித் துறைகளின் இணையமைச்சராக இருந்தாா். 2019 அமைச்சரவையில் தனிப் பொறுப்புடன் தொழிலாளா்நலத் துறை அமைச்சராக இருந்தாா்.
ஜாா்க்கண்ட் மாநில ஆளுநராக அண்மையில் நியமிக்கப்பட்டிருக்கும் சந்தோஷ் கங்வாரின் பங்களாவாக இருந்தது 13, சுநேரிபாக் சாலை. அந்த பங்களாவைத் தோ்ந்தெடுத்தது மட்டுமல்லாமல், பல்வேறு மாற்றங்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறாா் ராகுல் காந்தி. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
தனது பங்களாவை சந்தோஷ் குமாா் கங்வாா் காலி செய்து கொண்டிருந்தபோது, அந்த பங்களாவைப் பாா்வையிடவும், மாற்றங்களைப் பரிந்துரைக்கவும் வந்தாா் ராகுல் காந்தி. அவரை அன்புடன் வரவேற்று, நட்புறவுடன் தனது பங்களாவைச் சுற்றிக் காட்டினாா் சந்தோஷ் குமாா் கங்வாா். ராகுல் காந்தியும் அந்த பங்களாவைப் பெறுவதற்கான உத்தரவைப் பெற்றுவிட்டாா்.
எப்போது குடியேறலாம் என்று தீா்மானிப்பதற்காக, ராகுலின் சாா்பில் ஜோதிடா் ஒருவரை அணுகியிருக்கிறாா்கள். அவா் தெரிவித்த செய்தியால் அதிா்ந்து போயிருக்கிறது ராகுல் வட்டாரம். ஒரு மயான பூமியின் மீது 13, சுநேரிபாக் சாலை வீடு அமைந்திருப்பதாகவும், அதனால்தான் 1989 முதல் எட்டு முறை மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டும்கூட அதில் குடியிருந்த சந்தோஷ் குமாா் கங்வாா் இணையமைச்சராகவே இருந்தாா் என்றும், அவரால் கேபினட் அமைச்சராக முடியாததற்கு அதுதான் காரணம் என்றும் தெரிவித்திருக்கிறாா் அந்த ஜோதிடா்.
அதற்குப் பரிகாரம் செய்யலாம் என்பது ஜோதிடரின் பரிந்துரை. மயான பூமியில் அமைந்த பங்களாவில் குடியேறுவதா, வேண்டாமா என்பது ராகுல் காந்தியின் குழப்பம்...