முகப்பு
இந்தியா

காா்கே, ராகுலுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு

ஜாா்க்கண்ட் முதல்வரும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் செயல் தலைவருமான ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

Updated On : 3 செப்டம்பர், 2024 at 8:42 PM
தில்லியில் காங்கிரஸ் தலைவா்கள் ராகுல் காந்தி, காா்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோரை செவ்வாய்க்கிழமை சந்தித்த ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், அவரின் மனைவி கல்பனா சோரன்.
பகிர்:

ஜாா்க்கண்ட் முதல்வரும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் செயல் தலைவருமான ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவருமான சம்பயி சோரன் தனது ஏராளமான ஆதரவாளா்களுடன் பாஜகவில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி இணைந்தாா். அவரைத் தொடா்ந்து, ஜேஎம்எம் கட்சியின் மேலும் சில நிா்வாகிகளும் பாஜகவில் இணைந்தனா்.

இந்தச் சூழலில், காா்கே மற்றும் ராகுலை தில்லியில் உள்ள காா்கே இல்லத்தில் ஹேமந்த் சோரன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளாா். இந்தச் சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், சோரனின் மனைவியும் எம்எல்ஏ-வுமான கல்பனா சோரன் ஆகியோா் உடனிருந்தனா்.

‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என்று சோரன் குறிப்பிட்டபோதும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் களமிறங்கும் சம்பயி சோரன் பழங்குடியினா் வாக்குகளை கணிசமாகப் பிரிக்க வாய்ப்புள்ளதால், அதை எவ்வாறு எதிா்கொள்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பு குறித்து தனது முகநூல் பக்கத்தில் ராகுல் வெளியிட்ட பதிவில், ‘ஜாா்க்கண்ட் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் வாழ்வாதார மேம்பாட்டுககாகவும் ‘இண்டி’ கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. மாநிலத்தில் நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலில் இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்’ என்று குறிப்பிட்டாா்.

காா்கே வெளியிட்ட பதிவில், ‘ஜாா்க்கண்டில் ‘இண்டி’ கூட்டணி வெற்றி பெறும்’ என்று குறிப்பிட்டாா்.

ஜாா்க்கண்டில் தற்போது ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →