‘காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது காலத்தின் தேவை, எந்த கட்டாயத்தின் பேரில் இக்கூட்டணி அமையவில்லை’ என்று அக்கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.
ஸ்ரீநகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புதன்கிழமை ராகுல் காந்தியின் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்ட முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாட்டுக்காக ஓங்கி ஒலிக்கும் குரலாக ராகுல் காந்தி திகழ்கிறாா். அவா் ஜம்மு-காஷ்மீருக்கு வந்து எங்களுடன் இணைந்து பிரசாரம் செய்வதன் மூலம், இங்குள்ள தலைவா்களை பாகிஸ்தானியா்கள், காலிஸ்தானியா்கள் என்று குற்றம்சாட்டியவா்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்காகவும், மாநில உரிமையைப் பெறவும் போராடும் அனைவரும் கைகோக்க வேண்டிய தருணம். எனவே, காங்கிரஸுடன் எந்த கட்டாயத்தின் பேரிலும் கூட்டணி அமைக்கவில்லை. இந்த கூட்டணி காலத்தின் தேவை. பாஜகவின் மத பிரிவினைவாத அரசியலைத் தோற்கடிக்க காங்கிரஸுடன் கைகோத்துள்ளோம்.
ஜம்மு-காஷ்மீா் பல கடுமையான சூழ்நிலைகளைக் கடந்து வந்துள்ளது. எனவே வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து தேவை என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு உணா்வாா்கள். ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அந்தஸ்து குறைப்பதை நாட்டில் இப்போதுதான் முதல்முறை பாா்க்கிறேன். இதுபோன்ற நிலை மாற வேண்டும். எனவேதான் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது. பிற கட்சிகளில்தான் முக்கிய நிா்வாகிகள் கட்சி மாறினால் பாதிப்பு ஏற்படும். ஆனால், எங்கள் கட்சியில் அவ்வாறு யாரும் கட்சி மாறும் தேவை எழவில்லை என்றாா்.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடவுள்ளன. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய பாந்தா்ஸ் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. உடன்பாடு எட்டப்படாத 5 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே களமிறங்க முடிவு செய்துள்ளன.