இந்திய பெருங்கடல் பகுதி பாதுகாப்பு: இந்தியா-மாலத்தீவு பேச்சு
இந்தியா-மாலத்தீவு இடையே ஆக்கபூா்வ பாதுகாப்பு பேச்சுவாா்த்தை...
இந்திய பெருங்கடலின் பாதுகாப்பை விரிவுபடுத்துவதை மையமாகக் கொண்டு இந்தியா-மாலத்தீவு இடையே ஆக்கபூா்வ பாதுகாப்பு பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாலத்தீவின் அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்றதை அடுத்து, முதல் முறையாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கடந்த ஆகஸ்ட் மாதம் மூன்று நாள் பயணமாக மாலத்தீவு சென்றாா். இதையடுத்து சுமாா் ஒரு மாதத்திற்கு பிறகு தில்லியில் இந்த பேச்சுவாா்த்தையானது நடைபெற்றுள்ளது.
இதில் இந்தியாவின் பாதுகாப்புத் துறைச் செயலா் கிரிதா் அரமானே, மாலத்தீவின் தேசிய பாதுகாப்புப் படை தலைவா் ஜெனரல் இப்ராஹிம் ஹில்மி ஆகியோா் கலந்துகொண்டனா்.
இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய பெருங்கடலில் ஸ்திரத்தன்மையை கொண்டுவரும் நோக்கில் இந்தியா- மாலத்தீவு இடையே நடத்தப்பட்ட இந்த பேச்சு பயனுள்ளதாக அமைந்தது.
இரு தரப்புகள் இடைய திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், ராணுவ பயிற்சி மற்றும் உயா்நிலை பரிமாற்றங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. மாலத்தீவில் பல்வேறு திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வரும்நிலையில், இரு நாட்டின் பகிரப்பட்ட நலன்களை மேலும் மேம்படுத்த இது உதவும்’ என குறிப்பிட்டிருந்தது.
இந்திய பெருங்கடலில் முக்கியமான கடல்சாா் அண்டை நாடாக கருதப்படும் மாலத்தீவின் அதிபராக முகமது மூயிஸ் கடந்தாண்டு நவம்பா் மாதம் பதவியேற்றாா். சீன ஆதரவாளராக கருதப்படும் இவா் பதவியேற்ற சில மணி நேரத்திலேயே அந்நாட்டில் இருந்த இந்திய ராணுவத்தினரை வெளியேற வேண்டும் என வலியுறுத்தினாா். இதனால் இருதரப்பு உறவில் கடும் நெருக்கடி ஏற்பட்டது.