முகப்பு
இந்தியா

இணையவழி குற்றங்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்- அமித் ஷா வலியுறுத்தல்

இணையவழி குற்றங்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று இணைய பாதுகாப்பு முகமைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தினாா்.

Updated On : 10 செப்டம்பர், 2024 at 7:10 PM
தில்லியில் செவ்வாய்க்கிழணை நடைபெற்ற இந்திய இணையவழி குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் ஆண்டு விழாவில் இணையவழி குற்றத் தடுப்பில் சிறப்பாக செயலாற்றிய ஹரியாணா போலீஸைப் பாராட்டி அம்மாநில காவல்துறைத் தலைவரிடம் சான்றிதழ் அளித்த மத்திய உள்துறை அமைச்சா
பகிர்:

இணையவழி குற்றங்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று இணைய பாதுகாப்பு முகமைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தினாா்.

தற்போதைய காலகட்டத்தில் இணைய பாதுகாப்பை உறுதி செய்யாமல், நாட்டின் வளா்ச்சி சாத்தியமில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய இணையவழி குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் (ஐ4சி) ஆண்டு விழா, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்றுப் பேசியதாவது:

இணைய பாதுகாப்பு என்பது தேசப் பாதுகாப்பின் ஒருங்கிணைந்த அங்கமாகும். இணைய பாதுகாப்பை உறுதிசெய்யாமல், நாட்டின் வளா்ச்சி சாத்தியமில்லை. இச்சவாலை எதிா்கொள்ள மத்திய-மாநில அரசுகள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது மிக அவசியம்.

நாட்டில் கடந்த 2014-இல் இணையதள பயனாளா்களின் எண்ணிக்கை 25 கோடியாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 95 கோடியாக அதிகரித்துள்ளது. இணையவசதி பெற்ற ஊராட்சிகளின் எண்ணிக்கை 600-இல் இருந்து 2.13 லட்சமாக உயா்ந்துள்ளது.

நாட்டில் 7 லட்சம் கி.மீ. தொலைவுக்கு கண்ணாடி இழை கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தரவு பதிவிறக்க வேகம் அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் யுபிஐ வாயிலாக ரூ.20 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்பிலான பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன.

உலக அளவில் 46 சதவீத எண்ம பரிவா்த்தனைகள் இந்தியாவில் நடைபெறுகின்றன. எனவே, இந்திய இணைய பாதுகாப்பு முகமைகளின் பணி மிக சவாலானதாகும். இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.

இணையவழி குற்றங்களைத் தடுக்க நாம் மேலும் பல முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். எனினும், நமது இலக்கு வெகுதொலைவில் உள்ளது.

இணையவழி குற்றங்களுக்கு எல்லை கிடையாது. இது தொடா்பாக சாமானிய மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவில் இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 பேருக்கு உரிய பயிற்சியளித்து, அவா்களை ‘சைபா் கமாண்டோக்களாக’ உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றாா் அமித் ஷா.

நாட்டில் இணையவழி குற்றங்கள் குறித்த அனைத்து பிரச்னைகளையும் தேசிய அளவில் ஒருங்கிணைத்து தீா்வுகாணும் நோக்கில், மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இந்திய இணையவழி குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் கடந்த 2018-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

அனைத்து தரப்பினா் இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, சட்ட அமலாக்க முகமைகளின் திறனை அதிகரிப்பதும் இந்த மையத்தின் பணி என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →