மனிதர்கள் வேட்டையாடி வாழ்ந்த காலத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்குதல், பொருள்களைப் பறித்துக் கொள்ளுதல் போன்ற செயல்கள் நடந்துள்ளன. தங்களின் உயிரையும், வாழ்க்கையையும் தற்காத்துக் கொள்வதற்காக, தீங்கு விளைவிக்கும் அத்தகைய செயல்களில் ஆதி மனிதர்கள் ஈடுபட்டனர். அவை அந்தக் காலத்தில் சட்ட மீறல்களாகவோ அல்லது குற்றச் செயல்களாகவோ கருதப்படவில்லை.
நாடோடிகளாக வாழ்ந்த ஆதி மனிதர்கள், காலப்போக்கில் சிறு சிறு குழுக்களாகவும், பின்னர் சமுதாயமாகவும் ஒருங்கிணைந்து வாழத் தொடங்கினர். விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டனர். சேமிப்பு, சொத்துரிமை போன்றவை சமுதாயத்தில் நிகழத் தொடங்கின. இதன் விளைவாக திருட்டு, நிலத்தகராறு, இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் வன்முறை, சமுதாய கட்டமைப்பு மீறல்கள் போன்ற செயல்கள் சமுதாயத்தில் நிகழத் தொடங்கின.
அந்தச் செயல்கள் சமுதாயத்தில் தீங்கு விளைவிக்கும் செயல்களாக இருந்தாலும், அவற்றைக் "குற்றம்' என்ற கண்ணோட்டத்தில் அணுகிய, சட்ட ரீதியான நடைமுறை அந்தக் காலத்தில் இல்லை. தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, அவர்களின் செயல்களுக்கு ஏற்ப உடல் உறுப்புகளைக் கழித்தல், சமுதாயத்தில் இருந்து வெளியேற்றுதல் உள்ளிட்ட சமூகக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வந்தன. மனித சமுதாயத்தில் ஏற்பட்ட வளர்ச்சிக்கேற்ப, குற்ற நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. குற்றங்களுக்கான காரணங்கள், நிகழ்த்தப்படும் முறைகள், குற்றங்களை எதிர்கொள்ளும் முறைகள் சமுதாயத்தில் காலத்துக்கேற்ப மாற்றம் அடைந்தன.
மன்னர்களின் ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில், குடிமக்களின் நலனில் மன்னர்கள் கவனம் செலுத்தினர். சமுதாயத்தில் நிலவிவந்த குற்றங்கள், அவற்றுக்கான தண்டனைகள் குறித்த விதிகள் வகுக்கப்பட்டன. பண்டைய இந்தியாவில் திருட்டு, தாக்குதல், மோசடி, பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்த விவரங்கள் மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பழம்பெரும் நாகரிகம் எனக் கருதப்படும் பாபிலோனில் கி.மு. 18-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஹம்முராபி சட்டத்தில் பல்வேறு குற்றங்கள் மற்றும் அவற்றுக்கான தண்டனைகள் குறித்த விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மனித சமுதாயத்தின் வளர்ச்சியுடன் சேர்ந்து, பல்வேறு வகையான குற்ற நிகழ்வுகளும் சமுதாயத்தில் உருவெடுத்தன.
குறிப்பாக 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய தொழில்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட நகரமயமாக்கல் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையை சமுதாயத்தில் அதிகரிக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து, குற்றங்கள் மீது துப்பு துலக்கி, உண்மை கண்டறியும் குற்றப் புலனாய்வு முறையானது சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
தொழில்முறை குற்றப் புலனாய்வு அமைப்பானது உலகிலேயே முதன் முதலில் 1749-ஆம் ஆண்டில் பிரிட்டனின் லண்டன் நகரில் தொடங்கப்பட்டது. "போ ஸ்ட்ரீட் ரன்னர்ஸ்' என்றழைக்கப்பட்ட அமைப்பை லண்டன் நகரிலுள்ள போ ஸ்ட்ரீட் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஹென்றி ஃபீல்டிங் ஏற்படுத்தினார்.
லண்டன் நகரில் திருட்டு, கொள்ளை, சாலை வழிப்பறி போன்றவை அதிகரித்ததைத் தொடர்ந்து, குற்றங்கள் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாகச் சென்று, துப்பு துலக்கி, குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியை போ ஸ்ட்ரீட் ரன்னர்ஸ் மேற்கொண்டனர்.
அது மட்டுமின்றி, குற்றவாளிகள் தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய பதிவேடுகளை அவர்கள் பராமரித்தனர். 1829-ஆம் ஆண்டில் லண்டன் மெட்ரோபோலிடன் காவல் அமைப்பு உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மெட்ரோபோலிடன் காவல் அமைப்பில் இணைக்கப்பட்டனர்.
குற்றம் நடைபெற்ற இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்தல், சேகரித்த ஆதாரங்களை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்தல், ஆய்வின் முடிவுகளை நீதிமன்றத்தில் சாட்சியமாக சமர்ப்பித்தல் போன்றவற்றுக்கு அறிவியலைப் பயன்படுத்தும் முறை 19-நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்தது. குறிப்பாக, கைவிரல் ரேகை ஆய்வு, டி.என்.ஏ. பரிசோதனை, ரத்தம், முடி போன்ற உயிரியல் ஆதாரங்களின் ஆய்வு, கையெழுத்து ஆய்வு, உடற்கூறு ஆய்வு போன்றவற்றை குற்றப் புலனாய்வில் பயன்படுத்தும் முறைகள் நடைமுறைக்கு வந்தன.
கணினி, இணையம், செயற்கை நுண்ணறிவு போன்றவை பொதுமக்களின் பயன்பாட்டில் அதிகளவில் இருந்து வருகின்ற தற்போதைய சூழலில், சைபர் குற்றங்கள், நிதி மோசடிகள், அடையாளத் திருட்டு, டீப்-பேக் தொழில்நுட்பக் குற்றங்கள் போன்றவை சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதிகரித்துவரும் நவீன குற்றங்களில் விரைந்து துப்பு துலக்குவதற்கும், குற்றங்கள் நடைபெறும் இடங்களை முன்கூட்டியே கணித்து, குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பங்கள் பெரிதும் பயன்படுகின்றன.
கடந்த காலங்களில் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான தரவுகளை (இடம், நேரம், குற்றம் நடைபெற்ற முறை) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பகுப்பாய்வு செய்து, குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகள் மற்றும் நேரங்களை முன்கூட்டியே கணிக்கிறது. அவை தொடர்பான முன்னெச்சரிக்கையை காவல் துறைக்கு செயற்கை நுண்ணறிவு உரிய நேரத்தில் வழங்கி, குற்றங்களைத் தடுக்க உதவுகிறது.
தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் தொழில்முறை குற்றவாளிகளைப் பொது இடங்களில் அடையாளம் கண்டு, அவர்களால் நிகழ்த்தப்படும் குற்றங்களைத் தடுப்பதற்கு, முக அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுகிறது.
இணையவழி மோசடி, போலி மின்னஞ்சல் மோசடி, வங்கி மோசடி தொடர்பான சந்தேகமான பரிவர்த்தனைகளை செயற்கை நுண்ணறிவு உடனடியாகக் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்களை உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்வதன் மூலம், இணையவழிக் குற்றங்களால் ஏற்படக் கூடிய பெரும் இழப்பை செயற்கை நுண்ணறிவு தடுக்கிறது.
சமூக ஊடகங்களில் உள்ள பதிவுகளை செயற்கை நுண்ணறிவு ஆய்வு செய்து, மிரட்டல், வெறுப்பு பேச்சு, கலவர அறிகுறிகள் போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்து, வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க துணைபுரிகிறது. விபத்து அதிகளவில் நடைபெறும் இடங்கள், அதிக வேகம் மற்றும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுதல் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து, விபத்துகளால் ஏற்படக்கூடிய குற்றங்களைத் தடுக்கும் விதத்தில் போக்குவரத்து காவல் துறைக்கு உரிய தகவல்களை செயற்கை நுண்ணறிவு வழங்குகிறது.
குற்றம் நடைபெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோக்கள் போன்ற தரவுகளை ஆய்வு செய்து, குற்றம் நடைபெற்ற விதத்தை செயற்கை நுண்ணறிவு தெளிவுபடுத்துகிறது. குற்றம் நிகழ்ந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட பல மணி நேர சிசிடிவி காட்சிகளை செயற்கை நுண்ணறிவு சில நிமிஷங்களில் ஆய்வு செய்து, சம்பவ இடத்தில் சந்தேகமான முறையில் தென்படும் நபர்கள், வாகனங்கள் மற்றும் பொருள்கள் குறித்த தகவல்களை புலனாய்வு அதிகாரிகளுக்கு வழங்குகிறது.
குற்றப் புலனாய்வின் போது சந்தேக நபர்கள், தொலைபேசி பதிவுகள், நிதி பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, அவற்றுக்கு இடையேயான தொடர்புகளை விரைவாகவும், துல்லியமாகவும் கண்டறிய செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது.
குற்றப் புலன் விசாரணையை வேகமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ள செயற்கை நுண்ணறிவு உதவியாக இருந்தாலும், மனிதர்களால் மேற்கொள்ளப்படும் புலன் விசாரணைக்கு மாற்றாக இது அமையாது. தவறான தரவுகளை செயற்கை நுண்ணறிவு வழங்கி, புலன் விசாரணையைத் தவறாக வழி நடத்திச் சென்ற சம்பவங்களும் உண்டு.
அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகரில் ஒரு கடிகாரக் கடையில் 2020-ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கில் துப்பறிய, திருட்டு நடைபெற்ற கடையில் பதிவாகியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றினர். ராபர்ட் வில்லியம்ஸ் என்பவர் அந்த திருட்டுக் குற்றத்தைச் செய்தார் என செயற்கை நுண்ணறிவை உள்ளடக்கிய முக அடையாளத்தைக் கண்டறியும் மென்பொருள் கூறியதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், உண்மையான குற்றவாளி வேறு நபர் என்பது பின்னர் தெரியவந்தது. தன் மீது பொய்யான குற்றத்தைச் சுமத்தி, கைது செய்ததற்காக ராபர்ட் வில்லியம்ஸ் டெட்ராய்ட் காவல்துறை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதைத் தொடர்ந்து, அவருக்கு 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்கப்பட்டது. 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு காலைப் பொழுதில், அமெரிக்காவின் டெட்ராய்ட் காவல் துறையினர் "போர்சா வுட்ரப்' என்ற எட்டு மாத கர்ப்பிணி பெண்ணின் வீட்டிற்கு வந்து, அவரைக் கைது செய்தனர்.
வன்முறையைப் பயன்படுத்தி கார் ஒன்றைக் கடத்தியதாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் முக அடையாள மென்பொருள் அந்த பெண்ணைக் குற்றவாளி என அடையாளம் காட்டியதால், அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில், அந்தப் பெண் உண்மையான குற்றவாளி அல்ல என்பதை உணர்ந்த காவல் துறையினர், அவரை உடனடியாக விடுதலை செய்தனர்.
குற்றப் புலன் விசாரணையில் துப்பு துலக்க பயன்படுத்திய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறான குற்றவாளிகளை அடையாளம் காட்டிய சம்பவங்கள் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் கடந்த காலத்தில் நிகழ்ந்துள்ளன. செயற்கை நுண்ணறிவின் முடிவுகளை மனித நுண்ணறிவு சரி பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்பதை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.
கட்டுரையாளர்: முன்னாள் காவல் துறை உயரதிகாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.