போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பிலிருந்த போதைப்பொருள் ஆய்வாளர் கைது
சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பல கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்
பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பிலிருந்த போதைப்பொருள் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
பஞ்சாபில் உள்ள சண்டிகர் நகரில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் போதைப்பொருள் ஆய்வாளரும் தொடர்பிலிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் ஆய்வாளரிடம் நடத்தப்பட்ட சோதனையில், சிறையில் அடைக்கப்பட்ட கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததுடன், அவர்களுக்காக கைக்கூலியாக இருந்து வந்ததும் தெரிய வந்தது.
சட்டவிரோத மருந்துகள், மருந்தகங்கள், போதைப்பொருள் பணத்தை பதுக்குவது தொடர்பான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஆய்வாளர் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி, சிறையில் அடைக்கப்பட்ட கடத்தல்காரர்கள், வெளியே நடத்தும் போதைப்பொருள் வியாபார வலையமைப்பையும் எளிதாக்கி தந்துள்ளார்.
இதனையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலம், அவரிடமிருந்து 1.49 கோடி ரூபாய் ரொக்கமும், 260 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர, 7.09 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டதுடன், இரண்டு வங்கி லாக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஜிராக்பூர் மற்றும் தப்வாலியில் 2.40 கோடி ரூபாய் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் உள்பட சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட கணிசமான சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து, போதைப்பொருள் ஆய்வாளரை போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு கைது செய்தது.