மோடி அரசின் 100 நாள் சாதனைத் திட்டங்களில் தமிழகத்துக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சர் எல்.முருகன்
பிரதமர் நரேந்திர மோடி அரசு 100 நாள்களில் செயல்படுத்தியுள்ள சாதனைத் திட்டங்களில் தமிழகத்திற்கு உரிய முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
நமது நிருபர்
பிரதமர் நரேந்திர மோடி அரசு 100 நாள்களில் செயல்படுத்தியுள்ள சாதனைத் திட்டங்களில் தமிழகத்திற்கு உரிய முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
இது தொடர்பாக தில்லியில் அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 100 நாள்களில் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி ரூ.15 லட்சம் கோடி திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அவர் இத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இந்த 100 நாள்களில் செமிகண்டக்டர் மிஷன் திட்டத்தில் இந்தியாவில் ரூ.76 ஆயிரம் கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக இடம் பெற்றுள்ளது.
தூத்துக்குடி துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி: மதுரை- நாகர்கோவில், மதுரை-பெங்களூரூ ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 5 வந்தே ரயில்கள் விடப்பட்டிருந்தன. தூத்துக்குடி கப்பல் துறைமுகத்தில் துறைமுக மேம்பாட்டுக்காக சுமார் ரூ.7 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று தமிழகத்தில் நெடுஞ்சாலைத் திட்டங்களில் ரு.20 ஆயிரம் கோடி நிதிக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முகையூர் - மரக்காணம் தேசிய நெடுஞ்சாலை, சேலம் -திருப்பத்தூர் - வாணியம்பாடி நான்குவழிச்சாலை, காரைக்குடி - ராமநாதபுரம் இருவழிச்சாலை, 6 வழிசாலையாக செட்டிக்குளம் - நத்தம், திருச்சி - காங்கேயம் நான்குவழிச்சாலை திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி: 100 நாள்களில் ரயில்வே திட்டங்களுக்கு ஏறக்குறைய ரூ.6 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க அடிப்படை உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8 அதிவேக நெடுஞ்சாலைப் பாதைகள் 900 கி.மீட்டருக்கு அமைக்க ரூ.50,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கு ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமச் சாலைகளை இணைக்க ரூ.46 ஆயிரம் கோடி: 25 ஆயிரம் கிராமச் சாலைகளை இணைக்க ரூ.46 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று விவசாயத் துறையை ஊக்குவிக்க விவசாய உள்கட்டமைப்பு நிதியாக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9.03 கோடி விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பிரதமர் சம்மான் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
மீன்வளத் துறையை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த நீர் பூங்காக்கள் ஐந்து உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) 12 சதவீதத்தில் இருந்து 17.7 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு கடனுதவி: மகளிர் மேம்பாட்டில் கிட்டத்தட்ட 11 லட்சம் பெண்கள் லட்சாதிபதியாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். 26 லட்சம் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு 5 ஆயிரம் கோடி மதிப்பில் கடன் அளிக்கப்பட்டுள்ளது. முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் அதிகப் பயனாளிகளாக உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. 3 கோடி பேருக்கு வீடு கட்டும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இளைஞர்களின் மேம்பாட்டுக்காக 1.40 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு திறன்களைப் பெறும் வகையில் ரூ.2 லட்சம் கோடி திட்டம் செயல்பட்டுள்ளது.
மத்திய அரசில் 15 ஆயிரம் பேருக்கு வேலை: மத்திய அரசின் துறைகளில் 15 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஓய்வூதியம் திட்டம், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆயுஷ்மான் திட்ட விரிவாக்கம், 75 ஆயிரம் மருத்துவப் படிப்பு இடங்கள் அதிகரிப்பு என 2047-இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நிலையை எட்டும் வகையில் 100 நாள்களில் இத்தகைய திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ளார் என்றார் அமைச்சர் எல்.முருகன்.
ரூ,12,554 கோடி ஒதுக்கீடு: இதனிடையே, தேசிய பேரிடர் தணிப்பு நிதி, தேசிய பேரிடர் நிவாரண நிதி, மாநில பேரிடர் தணிப்பு நிதி மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதி ஆகியவற்றில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசின் 100 நாள் ஆட்சியில் சுமார் ரூ.12,554 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் இது நகர்ப்புற வெள்ள மேலாண்மை, தீயணைப்பு சேவைகள், பனிப்பாறை ஏரி வெடிப்பால் ஏற்படும் வெள்ள அபாயம் மற்றும் பிற பேரிடர்களுக்கு நிவாரண நிதியாக வழங்கப்பட்டது என்றும் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார்.