தில்லியில் திருமணம் செய்வதாக 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்தவரை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
பல்வேறு திருமணப் பதிவு வலைதளங்கள் மூலம் பணக்கார இஸ்லாமிய பெண்களை குறிவைத்து முகீம் அய்யூப் கான் ஏமாற்றியுள்ளார். இவரால் ஏமாற்றப்பட்டவர்களில் பெண் நீதிபதியும் அடங்குவார்.
மேலும், முகீமை கைது செய்துள்ள தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
ஏமாற்றியது எப்படி?
38 வயதாகும் முகீம் அய்யூப் கான், திருமணப் பதிவு வலைதளங்களில் திருமணம் ஆகாத, விதவை மற்றும் விவகாரத்து ஆன முஸ்லிம் பெண்களை குறிவைத்து அவர்களிடம் பேசி முதலில் செல்போன் எண்ணை பெறுகிறார்.
பின்னர், அவர்களிடம் தான் ஒரு அரசு ஊழியர் என்றும், மனைவியை இழந்து குழந்தையை வளர்க்க முடியாமல் தவிப்பதாகவும், குடும்பப் பிரச்னை இருப்பதாகவும் பல கட்டுக் கதைகளை சொல்லி அனுதாபங்களை பெறுகிறார். நம்பிக்கையை ஏற்படுத்த அவரின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படத்தையும் பகிர்கிறார்.
தொடர்ந்து, அந்த பெண்களின் குடும்பத்தினரை சந்தித்து திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் ஏமாறும் பெண்களிடம் திருமண மண்டபம், ஹோட்டல் உள்ளிட்டவை புக்கிங் செய்ய பணத்தை பெற்றவுடன் தப்பித்து விடுவார்.
இதில், பல பெண்களை திருமணம் செய்த பின்னர், அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக வாக்குமூலத்தில் முகீம் தெரிவித்துள்ளார்.
பிடிபட்டது எப்படி?
பல்வேறு மாநிலங்களில் திருமண ஆசைகாட்டி ஏமாற்றப்படுவதாக வந்த புகார்களை ஒன்றிணைத்து, முகீமை காவல்துறையினர் தங்கள் வலையத்தில் கொண்டு வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆனால், தொடர்ந்து இருப்பிடத்தை முகீம் மாற்றி வந்ததால், அவரை கைது செய்வது காவல்துறையினருக்கு சவாலான ஒன்றாக இருந்தது. இதனிடையே, குஜாரத்தில் இருந்து தில்லிக்கு அவர் ரயிலில் வரும் தகவலைத் தொடர்ந்து, நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் வைத்து தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், காவல்துறையினரின் விசாரணையில் முகீமுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.