இந்தியாவில் கள்ளநோட்டுகள் பிடிபடுவது வாடிக்கையான ஒன்று. ஆனால், இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக மகாத்மா காந்திக்கு பதில் பாலிவுட் நடிகர் அனுபம் கெர் புகைப்படம் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்த்தின் அகமதாபாத் நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரண்டு நபர்களால் ஏமாற்றப்பட்டதாக ஒரு வியாபாரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதனைப் பகிர்ந்துள்ளார்.
ரூ. 1.60 கோடி மதிப்புள்ள பணக் கட்டுகளில் காந்திக்கு பதிலாக நடிகர் அனுபம் கெர் புகைப்படம் அச்சிடப்பட்டதைக் கண்டறிந்த காவல்துறை மொத்தக் கள்ளநோட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், அந்தப் பணத்தில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு பதிலாக ‘இந்திய ரிசோல் வங்கி’ என்று அச்சிடப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில், கள்ளநோட்டு அச்சிடப்பட்ட இடமான குஜராத்தின் சூரத் நகரிலிலுள்ள ஆன்லைன் ஆடை விற்பனை நிலையத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குற்றவாளிகள் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆடை விற்பனையகம் நடத்துவதைப் போல கள்ளநோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளனர்.
சூரத் சிறப்புக் காவல் படையினர் தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்று 3 பேரைக் கைது செய்து அவர்கள் வைத்திருந்த ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான உயர்ரக கள்ளநோட்டுகளைக் பறிமுதல் செய்துள்ளனர். நான்காவது நபர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிந்தி வெப் சீரீஸ் ‘ஃபார்சி’ மூலம் ஈர்க்கப்பட்டு கள்ளநோட்டுகள் அச்சடித்ததாகக் குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியைத் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் அனுபம் கெர் ”ஐநூறு ரூபாய் நோட்டில் மகாத்மா காந்திக்கு பதிலாக என்னுடைய புகைப்படமா? என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவராலும் நகைப்புக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.