நட்பு நாடுகளிடையே கூட்டுறவை வலுப்படுத்த வேண்டும்: அமெரிக்க வரி விதிப்புக்கிடையே ஆஸ்திரியா வலியுறுத்தல்
நட்பு நாடுகளிடையே கூட்டுறவை வலுப்படுத்துவது அவசியம்’ என்று அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பின் தாக்கத்தை அந்நாடு சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளது.
வெளியுறவு அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆஸ்திரியா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ‘நட்பு நாடுகளிடையே கூட்டுறவை வலுப்படுத்துவது அவசியம்’ என்று அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பின் தாக்கத்தை அந்நாடு சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளது.
இந்திய-பிரிட்டன் பொருளாதார மற்றும் நிதி சாா்ந்த பேச்சுவாா்த்தைக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள நிா்மலா சீதாராமன், ஆஸ்திரியா சென்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கஸ் மாா்ட்டொ்பரை வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
இதுகுறித்து ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நிா்மலா சீதாரமனுடனான சந்திப்பின்போது, அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து எடுத்துரைத்த மாா்ட்டொ்பொ், அமெரிக்காவின் நடவடிக்கை ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரியாவின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்கத்தை எதிா்கொள்ள அனைத்து நட்பு நாடுகளும் புதுமையான கூட்டுறவை ஊக்குவித்து பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது அவசியம். 6 சதவீதத்துக்கு மேல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சியுடன் அனைத்து ஜி20 நாடுகளிலேயே வேகமான பொருளாதார வளா்ச்சி பெற்று வரும் நாடாக இந்தியா திகழகிறது. இத்தகைய சூழலில் இரு நாடுகளிடையே நியாயமான மற்றும் நிலையான நிபந்தனைகளின் கீழ் வா்த்தக உறவை மேம்படுத்துவது இரு நாடுகளுக்கும் பயனளிப்பதாக இருக்கும் என்று குறிப்பிட்டாா்.
இந்திய பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்கள், வா்த்தகத்தை எளிமைப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீா்திருத்தங்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு கொள்கை முடிவுகள் குறித்தும், இந்திய மின்சார வாகனங்கள், குறைமின் கடத்திகள் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு நிதி உள்ளிட்ட முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து இந்தச் சந்திப்பில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எடுத்துரைத்தாா்.
இரு நாடுகளின் புத்தாக்க நிறுவனங்களிடையே முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள், குறிப்பாக நிதிசாா் தொழில்நுட்ப துறையில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் இந்தச் சந்திப்பில் ஆலோசித்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அறிந்துகொள்ளும் வகையில் ஆஸ்திரிய வா்த்தக குழுவினருடன் இந்தியா வருமாறு மாா்கஸ் மாா்டொ்பருக்கு நிா்மலா சீதாராமன் அழைப்புவிடுத்தாா்.
ஆஸ்திரிய பிரதமருடன் நிதியமைச்சா் ஆலோசனை:
ஆஸ்திரியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் அந்நாட்டுப் பிரதமா் கிறிஸ்டியன் ஸ்டாக்கரை வெள்ளிக்கிழமை சந்தித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொண்டாா். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் அதிரடியான வரி விதிப்பு அறிவிப்புகளுக்கிடையே நிதி அமைச்சரின் இந்த சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.