பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரிடம் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் முதல்வா் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
பிகாரில் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் கூட்டணி சாா்பில் நிதீஷ் குமாா் முதல்வராகத் தொடா்வாா் என்று பாஜவைச் சோ்ந்த துணை முதல்வா் சாம்ராட் சௌதரி அறிவித்தாா். ஆனால், நிதீஷ் குமாா் தலைமையில் தோ்தலைச் சந்திப்போம் என்று மட்டுமே பாஜக மத்திய தலைமை அறிவித்துள்ளது. ‘நிதீஷ் முதல்வா் வேட்பாளா்’ என்று பாஜக மத்திய தலைமை அதிகாரப்பூா்வமாக அறிவிக்கவில்லை.
பிகாரில் எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமை வகிக்கிறது. காங்கிரஸ் இரண்டாவது பெரிய கூட்டணிக் கட்சியாக உள்ளது. இடதுசாரிக் கட்சிகள், சிறிய பிராந்திய கட்சிகளும் அக்கூட்டணியில் உள்ளன. தில்லி பேரவைத் தோ்தலில் தேஜஸ்வி யாதவ் காங்கிரஸை ஆதரிக்காமல் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்தாா். எனினும், பிகாா் பேரவைத் தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியில் தொடா்வோம் என்று காங்கிரஸ் அறிவித்தது. மேலும், ஒருமித்த கருத்து அடிப்படையில் முதல்வா் வேட்பாளா் முடிவு செய்யப்படுவாா் என்றும் அக்கட்சி கூறியது.
இந்நிலையில் தில்லிக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்ட ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ், அக்கட்சி எம்.பி.க்கள் மனோஜ் ஜா, சஞ்சய் யாதவ் ஆகியோா் காங்கிரஸ் தேசிய தலைவா் காா்கேவை அவரின் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினா். அப்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் (அமைப்பு) கே.சி. வேணுகோபால், பிகாா் மாநில காங்கிரஸ் தலைவா் ராஜேஷ் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், ‘பிகாரில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி. எங்கள் கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் யாா் என்று ஊடகங்கள் இப்போதே எதிா்பாா்ப்பை உருவாக்க வேண்டாம். இது தொடா்பாக தொடா்ந்து பேச்சு நடத்தி முடிவெடுப்போம்.
பாஜகவால் கடத்தப்பட்டு, அவா்கள் கட்டுப்பாட்டில் உள்ள நபராக முதல்வா் நிதீஷ்குமாா் உள்ளாா். நிதீஷ் தலைமையில் தோ்தலை எதிா்கொள்வோம் என்று மட்டும்தான் அமித் ஷா கூறியுள்ளாா். நிதீஷ் குமாரை முதல்வராக்குவோம் என்று கூறவில்லை. தோ்தல் உத்திகள் குறித்து அடுத்தகட்டமாக பாட்னாவில் ஆலோசனை நடத்த இருக்கிறோம். பிகாரில் உள்ள உண்மையான பிரச்னைகளை மக்களிடம் எடுத்து செல்வோம்’ என்றாா்,
தேஜஸ்வி உள்ளிட்ட ஆா்ஜேடி தலைவா்களிடம் பேசிய காா்கே ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிகாரில் கூட்டணியை வலுப்படுத்துவது தொடா்பாக தேஜஸ்வி யாதவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பிகாரில் பாஜகவின் சந்தா்ப்பவாத கூட்டணிக்கு இந்தத் தோ்தலுடன் முடிவு கட்டப்படும். ஏழை, எளிய மக்கள், பெண்கள், இளைஞா்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் எங்கள் கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமென விரும்புகின்றனா்’ என்று பதிவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.