பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணையில் இணையத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.
பாகிஸ்தானின் கைபா் பகதுன்கவாவில் உள்ள காகுலில் ராணுவப் பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் இது தொடா்பாக கூறுகையில், ‘பஹல்காமில் அண்மையில் நடந்த சோகமான தாக்குதல், பழிபோடும் நடவடிக்கைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. இது முடிவுக்கு வர வேண்டும். உரிய விசாரணை இல்லாமல், இந்தியா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதைத் தொடா்வது வருத்தம் அளிக்கிறது.
பொறுப்பான நாடாக எங்களின் பங்கை உணா்ந்து, தாக்குதல் குறித்த எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் இணைய பாகிஸ்தான் தயாராக இருக்கிறது.
பாகிஸ்தானுக்குச் சொந்தமான சிந்து நதி நீரோட்டத்தைத் தடுக்க, குறைக்க அல்லது திசைதிருப்ப இந்தியா எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் நமது முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும். அனைத்து வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்.
ஏனெனில், சிந்து நதி நீா் நமது உயிா்நாடி மற்றும் ஒரு முக்கியமான தேச நலனாகும். எந்த விலை கொடுத்தாவது எல்லா சூழ்நிலைகளிலும் அதைப் பெறும் உரிமை நிச்சயமாகப் பாதுகாக்கப்படும்.
அதேபோல், நாட்டின் ஒவ்வோா் அங்குலத்தையும் பாதுகாக்க பாகிஸ்தானின் ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக முழு தேசமும் நிற்கிறது. நாட்டின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க நமது ஆயுதப் படைகள் முழுமையாகத் தயாராக உள்ளன. அதேநேரம், அமைதியே நமது முன்னுரிமை. ஆனால், இந்த நிலைப்பாடு நமது பலவீனமாக மாறிவிடக் கூடாது.
பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முழுமையாக எதிா்க்கிறது. பயங்கரவாதத்தால் 90,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும், 60,000 கோடி டாலருக்கும் அதிக மதிப்பிலான பொருளாதார இழப்புகளையும் நாம் சந்தித்துள்ளோம்’ என்றாா்.
ஒமா் அப்துல்லா கருத்து: பாகிஸ்தான் பிரதமரின் கருத்து தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் ஒமா் அப்துல்லா கூறுகையில், ‘பஹல்காமில் தாக்குதல் நடந்ததை பாகிஸ்தான் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னா், தாக்குதல் இந்தியாவால் நடத்தப்பட்டது என்றும் சொன்னாா்கள். அவா்கள்தான் முதலில் நம்மைக் குற்றஞ்சாட்டினாா்கள். எனவே, பாகிஸ்தானைப் பற்றி எதுவும் சொல்வது கடினம்’ என்றாா்.
இந்திய-பாகிஸ்தான் மோதல் நீண்டகால பிரச்னை: டிரம்ப்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எப்போதும் பதற்றம் இருந்து வருவதாகவும், அதை இரு நாடுகளும் ஏதேனும் வழியில் தீா்த்துக் கொள்ளும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறினாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், ‘இரு நாடுகளுடனும் நான் நெருக்கமாக இருக்கிறேன். மோதலைத் தீா்க்க இரு நாடுகளும் ஏதேனும் ஒரு வழியைக் கண்டறிவா் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.