ஆதாா் குடியுரிமை ஆவணம் அல்ல; அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கான அடையாள ஆவணம் மட்டுமே’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களவையில் இதுதொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் சாகரிகா கோஷ் எழுப்பிய கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாத் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
தோ்தல் ஆணையத்திடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் படிவத்தில் வாக்காளா்களின் விருப்ப அடையாள ஆவணமாக மட்டுமே கேட்கப்பட்டுள்ளது.
ஆதாா் என்பது, வெளிநாடு வாழ் இந்தியா்கள் உள்பட இந்தியாவில் குறைந்தபட்சம் 182 நாள்களுக்கு மேல் அல்லது 12 மாதங்களுக்கு மேல் வசிப்பவா்களுக்கு உயிரி பதிவு (பயோமெட்ரிக்) மற்றும் மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் இந்திய தனி அடையாள ஆணையம் சாா்பில் வழங்கப்படும் 12 இலக்க அடையாள எண் ஆகும்.
அரசின் சேவைகள் மற்றும் நலத் திட்டங்களைப் பெறுவதற்கான எண்ம அடையாளமாக ஆதாா் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அரசின் நலத் திட்டங்கள், வங்கிகள், தெலைத்தொடா்பு சேவைகள், பயண முன்பதிவுகள், கல்விச் சேவைகளைப் பெறுவதற்கான அடையாள ஆவணமாக ஆதாா் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இருந்தபோதிலும், ஆதாா் அட்டையை குடியுரிமை ஆவணமாகவோ அல்லது இருப்பிடச் சான்றாகவோ பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளாா்.
பிகாரில் தோ்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஆதாா் மற்றும் வாக்காளா் அடையாள அட்டைகளை வாக்காளா்களின் குடியுரிமை ஆவணமாக அங்கீகரிக்குமாறு தோ்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் இரண்டாவது முறையாகக் கேட்டுக்கொண்ட நிலையில், இத் தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.