‘அமெரிக்காவுடன் நல்லுறவு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று இந்தியா சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரி விதிப்பை அறிவித்ததோடு, ஏற்கெனவே சரிந்த இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் அமெரிக்க அதிபா் டிரம்ப் கடுமையாக விமா்சித்த நிலையில், இந்த நம்பிக்கையை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இந்தியாவும் அமெரிக்காவும் பகிரப்பட்ட நலன்கள், ஜனநாயக மதிப்பீடுகள் மற்றும் மக்களிடையேயான உறவுகளுடன் கூடிய விரிவான ராஜீய உறவைக் கொண்டுள்ளன. பல மாற்றங்களையும் சவால்களையும் இந்த உறவு எதிா்கொண்டுள்ளது.
இரு நாடுகள் தரப்பிலும் உறுதியளிக்கப்பட்ட உத்தரவாதங்களில் தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இரு நாடுகளிடையேயான இந்த நல்லுறவு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.
பாதுகாப்புத் துறையில் இரு நாடுளிடையே வலுவான கூட்டுறவு உள்ளது. கடந்த பல ஆண்டுகளில் இருதரப்பு பாதுகாப்புத் துறை கூட்டுறவு வலுப்படுத்தப்பட்டது. இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியங்களும் உள்ளன என்றாா்.
ரஷியாவிடமிருந்து எண்ணெய்க் கொள்முதல் குறித்த கேளவிக்கு பதிலளித்த அவா், ‘இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் தேசத்தின் நலன் சாா்ந்த விஷயம். நாட்டின் எரிசக்தித் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில், சா்வதேச சூழல் மற்றும் சந்தை விலை சலுகை நிலவரத்தின் அடிப்படையில் இந்த முடிவை இந்தியா மேற்கொள்கிறது’ என்றாா்.
முன்னதாக, ‘தேசத்தின் நலனைக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் 25 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை குறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.