புது தில்லி: நுரையீரல் புற்றுநோய் நாள் ஆகஸ்ட் ஒன்றாம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நுரையீரல் புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்.
இந்த நாளில், ஆசிய பசிபிக் நுரையீரல் புற்றுநோய் கொள்கை அமைப்பானது வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையானது, அச்சமூட்டுவதாக உள்ளது. புது தில்லி முழுக்க நுரையீரல் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு, காற்று மாசுபாடு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது என்கிறார்கள்.
தில்லியில் காற்று மாசுபாடு என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், இங்கு நுரையீரல் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் இந்நோய் வருவதையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
தில்லியில், மக்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் நுரையீரல் புற்றுநோய், கவலைதரும் இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்களை அதிகம் தாக்குகிறது. பாதுகாப்பாள அளவை விட 8 - 10 மடங்கு மோசமான தரத்திலேயே புது தில்லி காற்றின் தரம் இருக்கும். 2020ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள புற்றுநோயாளிகளில் 5.9 சதவீதத்தை இந்தியா கொண்டிருந்தது. இதில் 8.1 சதவீதம் அளவுக்கு புற்றுநோய் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. நுரையீரல் புற்றுநோய்க்கு இதில் முக்கிய பங்கிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டுக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் இருக்கும் தொடர்பில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் தில்லிக்குள் வாழ்கிறோம் என்றால் அதுதான் நிதர்சனம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதாவது, நுரையீரல் புற்றுநோய் பாதிக்கும் பெரும்பாலானோர் சிகரெட் பழக்கம் இல்லாதவர்களாக இருப்பது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பான ஆய்வுகள் கூறுவது என்னவென்றால், 30 வயதுக்குள்பட்ட புற்றுநோயாளிகள் சிகரெட் பழக்கம் இல்லாதவர்கள். 50 வயதுக்குள்பட்ட நுரையீரல் புற்றுநோய் பாதித்து அறுவைசிகிச்சை தெவைப்படுவோர் சிகரெட் பழக்கம் இல்லாதவர்கள் என்பதுதான்.
எனவே, புது தில்லியைப் பொறுத்தவரை, காற்று மாசுபாட்டைக் குறைக்காமல், நுரையீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது பற்றி பேசவே முடியாது. இது தற்போது வெறும் சுற்றுச்சூழல் பிரச்னை மட்டுமல்ல, மக்களின் சுகாதார அவசரநிலையாகவும் மாறியிருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.