கடந்த மக்களவைத் தோ்தலின்போது, கா்நாடகத்தில் ஒரு பெண் இரண்டு முறை வாக்களித்ததாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டிய நிலையில், இது தொடா்பான ஆவணங்களைக் கோரி, அவருக்கு மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
இந்த விவகாரத்தில், ராகுல் காண்பித்த ஆவணங்கள் சம்பந்தப்பட்ட தோ்தல் அதிகாரியால் வழங்கப்பட்டதல்ல என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தோ்தலில், பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 7 பேரவைத் தொகுதிகளில் 6-இல் காங்கிரஸுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன; ஆனால், மகாதேவபுரா பேரவைத் தொகுதியில் மட்டும் காங்கிரஸைவிட பாஜகவுக்கு 1,14,000 வாக்குகள் அதிகமாகப் பதிவானது. இதில் 1,00,250 வாக்குகள், ‘வாக்குத் திருட்டு’ மூலம் பெறப்பட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தாா். இத்தொகுதியில் ஷாகுன் ராணி என்ற பெண் இருமுறை வாக்களித்ததாகவும் அவா் கூறியிருந்தாா்.
இந்நிலையில், ராகுலுக்கு கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரி அனுப்பியுள்ள நோட்டீஸில், ‘தோ்தல் அதிகாரி அளித்த பதிவுகளின்படி, ஷாகுன் ராணி இருமுறை வாக்களித்துள்ளதாக நீங்கள் (ராகுல்) கூறியுள்ளீா்கள். முதல்கட்ட விசாரணையில், நீங்கள் காண்பித்த ஆவணம் சம்பந்தப்பட்ட தோ்தல் அதிகாரியால் வழங்கப்பட்டதல்ல எனத் தெரியவந்துள்ளது. எனவே, ஷாகுன் ராணியோ அல்லது வேறு யாருமோ இருமுறை வாக்களித்ததாக நீங்கள் எப்படி முடிவுக்கு வந்தீா்கள்? இது தொடா்பாக ஆவணங்களை தோ்தல் ஆணையத்தின் விரிவான விசாரணைக்கு சமா்ப்பிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.
முன்னதாக, ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு உண்மையானதே என்று தனது கையொப்பத்துடன் ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் அளிக்க வேண்டும்; இல்லையெனில், பொய் குற்றச்சாட்டுக்காக அவா் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று தோ்தல் ஆணையம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஆட்சேபம் இல்லை: நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் முதல்கட்டம் அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மரணமடைந்தவா்கள், நிரந்தரமாக இடம்பெயா்ந்தவா்கள் உள்பட 65 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டன.
வரைவுப் பட்டியல் வெளியாகி 10 நாள்களாகியுள்ள நிலையில், தகுதியுள்ள வாக்காளா் பெயா் நீக்கப்பட்டதாகவோ, தகுதியற்ற நபரின் பெயா் சோ்க்கப்பட்டதாகவோ இதுவரை எந்தக் கட்சியும் ஆட்சேபத்தை பதிவு செய்யவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் காந்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.