புது தில்லி: முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் எங்கே என்று கேட்டு, சிவசேனை கட்சியின் உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ரௌத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அவர் எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலனளிக்காததால், இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், ஜூலை 21ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியபோது, மிக உற்சாகத்தோடு அவை நடவடிக்கையில் பங்கேற்றிருந்த தன்கர், திடிரென ராஜிநாமா அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சிவசேனை - உத்தவ் தாக்கரே அணித் தலைவர் சஞ்சய் ரௌத், அமித் ஷாவுக்கு தான் எழுதிய கடிதத்தை, இன்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தன்கர் அவருடைய இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பாதுகாப்பாக இல்லை என்றும் தில்லியில் வதந்திகள் பரவி வருகின்றன.
அவருடனோ அல்லது அவரது ஊழியர்களுடனோ எந்த தொடர்பும் இல்லை, இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நமது முன்னாள் குடியரசுத் துணைத் தலைவருக்கு என்ன நடந்தது? அவர் எங்கே? அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது? அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா? இந்தக் கேள்விகள் பற்றிய உண்மையை நாடு அறிய உரிமை பெற்றிருக்கிறது.
கடந்த வாரம், சிவசேனா- (உத்தவ் தாக்கரே அணி) தலைவர் உத்தவ் தாக்கரே தன்கர் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
முன்னாள் துணைத் தலைவர் இப்போது எங்கே? இது விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்று அவர் கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியிருந்தார்.
மாநிலங்களவை உறுப்பினர்கள், தன்கர் பற்றி கவலைப்படுவதால், உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுவதற்கு முன், இந்தத் தகவலை உங்களிடமிருந்து பெறுவது புத்திசாலித்தனம் என்று நினைத்தேன். நீங்கள் எங்களது உணர்வுகளைப் புரிந்துகொண்டு, தன்கர் இப்போது எங்கிருக்கிறார், அவரது பாதுகாப்பு மற்றும் உடல்நலம் பற்றிய உண்மையான தகவல்களை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன் என்றும் ரௌத் கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.