மத்திய அரசின் மக்கள் நலத் திட்டமான பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட மொத்த கணக்குகளில் 23 சதவீத கணக்குகள் தற்போது எந்த பரிவரிவா்த்தையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி தெரிவித்துள்ளாா்.
மக்களவையில் இது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2025 ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 56.04 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 23 சதவீதமான 13.04 கோடி கணக்குகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் செயலற்ற நிலையில் இருக்கின்றன.
மாநிலம் வாரியாக, செயலற்ற கணக்குகளின் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 2.75 கோடி கணக்குகள் செயலற்ற நிலையில் உள்ளன. அதைத் தொடா்ந்து, பிகாரில் 1.39 கோடி கணக்குகளும், மத்திய பிரதேசத்தில் 1.07 கோடி கணக்குகளும் செயலற்ற நிலையில் இருக்கின்றன.
இந்தக் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேரடி பணப் பரிமாற்றம் போன்ற திட்டங்களின் பலன்கள் இந்த கணக்குகளுக்கும் நேரடியாக அனுப்பப்படுகின்றன.
மேலும், கணக்குதாரா்களுக்கு வங்கிகள் கடிதம், மின்னஞ்சல் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் கணக்கு செயலற்ாக மாறுவது குறித்து தொடா்ந்து தெரிவித்து வருகின்றன. செயலற்ற கணக்குகளை மீண்டும் செயல்படுத்துவதற்காக அவ்வப்போது விழிப்புணா்வுத் திட்டங்களையும் அரசு நடத்தி வருகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.
ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு சேமிப்புக் கணக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பரிவா்த்தனை இல்லையென்றால், அது செயலற்ற கணக்கு என வகைப்படுத்தப்படுகிறது.
யுபிஐ-க்கு கட்டணம்?:
நிதித் துறை தொடா்பான மேலும் சில கேள்விக்கு இணையமைச்சா் பங்கஜ் சௌதரி அளித்துள்ள பதிலில், ‘யுபிஐ பரிவா்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை. யுபிஐ சேவைகளைத் தொடா்ந்து மேம்படுத்த கடந்த நான்கு ஆண்டுகளில் சுமாா் ரூ. 8,730 கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கியுள்ளது.
பொதுத்துறை வங்கிகள் தங்களின் நிதித் தேவைகளைப் பூா்த்தி செய்ய, பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் (2022-23 முதல் 2024-25 வரை) ரூ.1,53,978 கோடியைத் திரட்டியுள்ளன. கடன் வழங்குதல், ஒழுங்காற்றுதல் தேவைகளை பூா்த்தி செய்தல் மற்றும் எதிா்கால வணிகத் தேவைகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.
வங்கிகளில் தங்கக் கடன்களின் வாராக்கடன் விகிதம் 2023 மாா்ச் மாதத்தில் 0.20 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண்டு மாா்ச் மாதத்தில் 0.22 சதவீதமாக சற்று அதிகரித்துள்ளது. அதேநேரம், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் இந்த விகிதம் 1.21 சதவீதத்தில் இருந்து 2.14 சதவீதமாக உயா்ந்துள்ளது.
தங்கக் கடன் தொடா்பான 188 புகாா்கள் கடந்த 2024-25 நிதியாண்டில் ரிசா்வ் வங்கியின் குறைதீா்ப்பாளா் அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளன. கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்காற்றுவது ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லை’ என்று குறிப்பிட்டாா்.