இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷியா தொடா்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது என்று அந்நாட்டின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்டுரோ புதன்கிழமை தெரிவித்தாா்.
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடா்ந்து ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா ஏற்கெனவே நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கூறியிருந்தாா்.
இந்நிலையில், மூன்று நாள் பயணமாக ரஷியா சென்றுள்ள வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தலைமையிலான குழுவினருடன் இரு நாடுகளிடையே வா்த்தகம், பொருளாதாரம், அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு தொடா்பாக ரஷிய துணைப் பிரதமா் மன்டுரோ தலைமையிலான குழு ஆலோசனை மேற்கொண்டது.
இந்த கூட்டத்துக்கு முன்பாக மன்டுரோ அளித்த பேட்டியில், ‘இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், பிற எண்ணெய் பொருள்கள் மற்றும் நிலக்கரியை ரஷியா தொடா்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவுக்கு திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதி செய்வது குறித்தும் ரஷியா ஆலோசித்து வருகிறது.
கூடங்குளம் அணு மின் உற்பத்தி நிலைய கட்டுமானத் திட்டத்தின் வெற்றிகரமான அனுபவத்தின் அடிப்படையில், அணுசக்தி துறையில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் ரஷியா ஆலோசித்து வருகிறது’ என்றாா்.
ரஷியா-இந்தியா-சீனா (ஆா்ஐசி) இடையே விரைவில் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையை எதிா்கொள்வதற்கென சிறப்பு திட்டத்தை ரஷியா வைத்துள்ளது. அமெரிக்காவுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றால் அதை ரஷியாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யலாம். ரஷிய சந்தை இந்தியாவுக்காக எப்போதும் திறந்திருக்கும்.