தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறைதீர் கூட்டத்தில், இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில், மக்களின் குறைகளை கேட்கும் ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சியின்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதல்வர் ரேகா குப்தாவை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில், தலை மற்றும் கன்னத்தில் காயத்துடன் முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல் நடத்தியவர் யார்? எதற்கு தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
குறைகேட்பு நிகழ்வின் போது முதல்வர் ரேகா குப்தா மீது நடந்துள்ள இந்தத் தாக்குதல் சம்பவத்தை தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களின் கூறுகையில், “தாக்குதல் நடத்தியவர் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்றும், அவர் கையில் ஒரு கோரிக்கை மனுவுடன் முதல்வரிடம் சென்று உரத்த குரலில் கத்தி, பின்னர் முதல்வர் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தனர்.
தில்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூரும், முதல்வர் இல்லத்தில் நடந்த ஜன் சன்வாய் நிகழ்வின் போது தாக்குதல் நடந்ததை உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒருவர் முதல்வரிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்து, அவரைத் திட்டத் தொடங்கினார். அவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து உடல் ரீதியாகத் தாக்கியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
தில்லியில் முதல்வர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தில்லி முன்னாள் முதல்வர் அதிஷி கண்டனர் தெரிவித்த நிலையில், தில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ், “தில்லியில் முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை. இதில், பெண்கள், பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பார்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.