எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய்யான பாலியல் வழக்குகளை பதிவு செய்த வழக்கறிஞர் ஒருவருக்கு லக்னெள சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவைச் சேர்ந்த வழக்கறிஞர் பரமானந்த குப்தா. இவர் சொத்து பிரச்னையில் தன் வீட்டின் அருகில் உள்ள அரவிந்த் யாதவ், அவதேஷ் யாதவ் ஆகியோர் மீது ஏராளமான வழக்குகளைத் தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் அரவிந்த் வீட்டில் வாடகைக்கு இருந்த பூஜா என்பவரின் மூலமாக அரவிந்த், அவதேஷ் இருவரின் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளார். பூஜா இதுபோல, 11 பொய்யான பாலியல் வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் காவல்துறையின் அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிமன்றம் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது. பின்னரே வழக்கறிஞர் பரமானந்த குப்தாவின் கட்டாயத்தின்பேரில், பூஜா பொய்யான பாலியல் புகார்களை அளித்தது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் வழக்கறிஞர் பரமானந்த குப்தாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி லக்னெள எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிபதி விவேகானந்த் சரண் திரிபாதி தீர்ப்பளித்துள்ளார்.
பிரிவு 217 மற்றும் 248-ன் கீழ் முறையே அவருக்கு ஒரு ஆண்டு மற்றும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 5.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அனைத்து தண்டனைகளும் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குப்தா போன்ற வழக்கறிஞர்கள் சட்டத்துறையில் நுழைவதையும் சட்டம் பயில்வதையும் தடுக்காவிட்டால் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கை கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறிய நீதிபதி குப்தா வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
வழக்கறிஞர் ஒருவர் தனிப்பட்ட காரணத்திற்காக போலி வழக்குகளைத் தொடர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | ஆக. 26 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.