மாநிலம்விட்டு மாநிலம் உடல் உறுப்புகள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவராக தேடப்பட்டுவந்த மயக்கவியல் மருத்துவரை தெலங்கானா சி.ஐ.டி. அதிகாரிகள் கைது செய்தனர்.
தனக்கு நெருக்கமான சில மருத்துவர்களுடன் சேர்ந்து இந்த மருத்துவர் மனித உடல் உறுப்புகள் கடத்தலில் மூளையாகச் செயல்பட்டிருப்பதும், ஒவ்வொரு அறுவைச் சிகிச்சைக்கும் அந்த மருத்துவருக்கு ரூ. 2.50 லட்சம் தொகையும் அளிக்கப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஹைதராபாத்தின் சரூர்நகர் - கோதப்பேட் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பல்நோக்கு மருத்துவமனையில் மனித உடல் உறுப்புகள் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. தொடர்ந்து, இது தொடர்பாக சரூர்ந்கர் காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டது. அதன்பின் கடந்த ஏப்ரலில், இந்த வழக்கு சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் உள்பட வேறு சில மருத்துவர்கள் என இதுவரை மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத் மாநகரில் பல மருத்துவமனைகளில் சட்டவிரோதமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகல் நடைபெறுவதும், அப்போது, உடல் உறுப்பு தானம் வழங்கவரும் நபர்களும் உடல் உறுப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கும் மயக்க மருந்து செலுத்தி, உடல் உறுப்பு கொள்ளையும் நடைபெற்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒரு மருத்துவர், எப்போதெல்லாம் சட்டவிரோத அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகிறதோ அப்போது மேற்கண்ட மயக்கவியல் மருத்துவரை அழைத்து, கூட்டாக உடல் உறுப்பு திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகியுள்ள பிற நபர்களையும் கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெலங்கானா சி.ஐ.டி. பிரிவின் கூடுதல் இயக்குநர் சாரு சின்ஹா ஐபிஎஸ் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.