உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள கசானா பகுதியில் ரூ. 36 லட்சம் வரதட்சிணை கேட்டு மனைவியை எரித்துக் கொலை செய்த சம்பவத்தில், வரதட்சிணையாகக் கொடுக்கப்பட்ட பொருள்கள் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
சம்பவம் பற்றி, நிக்கியின் சகோதரி காஞ்சன் கூறுகையில், திருமணத்தின்போது, எனது தந்தை, மாப்பிள்ளை வீட்டாருக்கு விலை உயர்ந்த ஸ்கார்பியோ சொகுசு கார், ராயல் என்ஃபீல்டு பைக், அவர்கள் கேட்ட ரொக்கப் பணம், தங்க நகைகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்தார்.
அது மட்டுமல்லாமல், கர்வா சௌத் பண்டிகையின்போதும், எங்களை தந்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். எங்கள் தந்தையும் அவரால் முடிந்த அளவுக்கு கொடுத்தனுப்பினார். ஆனால், அதில் கணவர் வீட்டார் மகிழ்ச்சி அடையவில்லை. எங்களை எப்போதும் மட்டம்தட்டிப் பேசி வந்தனர். 2 ரூபாய்க்கு துணி எடுத்துக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள் என்று திட்டிக்கொண்டே இருந்தார்கள் என்று தன் கண் முன்னே சகோதரி தீயில் எரிவதைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் பேசுகிறார்.
இந்த நிலையில்தான், தற்போது, மீண்டும் ரூ.36 லட்சத்தை தந்தையிடம் கேட்டு வாங்கி வருமாறு, வலியுறுத்தியும், நிக்கி வாங்கி வராததால், அவரை கொடூரமாக தீயிட்டு எரித்து கொலை செய்த கணவர் விபின் பாடி மற்றும் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளளனர்.
மனைவியைத் துன்புறுத்தும் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த விடியோக்களையும் நிக்கி சகோதரி காஞ்சன்தான் எடுத்திருக்கிறார்.
ஒரு விடியோவில் தாயுடன் சேர்ந்து மனைவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வந்து விபின் கடுமையாகத் தாக்குவது பதிவாகியிருக்கிறது. ஆசிட் போன்ற எளிதில் எரியக்கூடிய ஒரு திரவத்தை நிக்கி மீது ஊற்றி தீயிட்டு எரித்துள்ளனர். தீக்காயங்களுடன் அவர் உயிருக்குப் போராடும் விடியோ ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
நிக்கி - விபின் திருமணம் 2016ஆம் ஆண்டு நடந்த நிலையில், அதே நாளில் விபினின் மற்றொரு சகோதரர் ரோஹித்துக்கும் நிக்கியின் சகோதரி காஞ்சனுக்கும் திருமணம் நடந்துள்ளது.
சகோதரிகள் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில், நிக்கியிடம் ரூ.36 லட்சம் கேட்டு கணவரும் மாமியாரும் கொடுமைப்படுத்தி வந்த நிலையில், தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
ஆக. 21 ஆம் தேதி நடந்த இந்தக் கொடூர சம்பவம் குறித்து, காஞ்சன் அளித்த புகாரின்பேரிலேயே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நிக்கியின் கணவர் விபினை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
முன்னதாக, கைதான விபின், தப்பிச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் அவரை சுட்டுப் பிடித்தனர். அப்போது அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய விபின், நிக்கியை தான் கொலை செய்யவில்லை என்றும், அவரே தீயிட்டு எரித்து தற்கொலை செய்து கொண்டார் எனவும், கணவன் - மனைவி இடையே சண்டை வருவது இயல்பானது என்று எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பேசியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.