குஜராத்தில் உருவான வாக்குத்திருட்டு 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய அளவில் நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி வாக்குத்திருட்டில் ஈடுபட்டதாகவும், தரவுகளின் அடிப்படையிலேயே இந்த குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இந்தப் பேரணி இன்று (ஆக. 26) 10வது நாளை எட்டியுள்ளது.
பிகாரின் மதுபானி பகுதியில் தொண்டர்கள் மத்தியில் இன்று (ஆக. 26) ராகுல் காந்தி பேசியதாவது,
''நான் பொய் கூறவில்லை. என் முன்னால் இருக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே வாக்குத்திருட்டில் பாஜக ஈடுபடுகிறது எனக் கூறுகிறேன். அடுத்த 40 - 50 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சியில் இருக்கும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா எங்குச் சென்றாலும் கூறி வருகிறார். இது என்னை சிந்திக்கவைத்தது. அடுத்த 40 -50 ஆண்டுகளுக்கு அதிகாரத்தில் இருப்போம் என்பது அவருக்கு எப்படித் தெரியும்? இது ஒரு விசித்திரமான கூற்று.
உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜக வாக்குத்திருட்டில் ஈடுபட்டுள்ளது என்பது நாட்டு மக்கள் முன்பு உடைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குத்திருட்டு ஆரம்பமானது குஜராத்தில்தான் என்பது ஒருநாள் வெளிப்படும். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் இது மற்ற மாநிலங்களிலும் பரவலானது.
மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா தேர்தலின்போது, வாக்குப்பதிவு தேதியை அவர்கள் மாற்றினார்கள். நான் மோடியுடன் அமர்ந்திருந்தேன். அவர்கள் பாணியில், மோடி தேர்வு செய்பவரே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர அவர்கள் அமர வைத்தனர். அவரால் எதையுமே அங்கு செய்யமுடியாது என்ற நிலையை உருவாக்கினர்.
2023-ல் பாஜக அமைதியாக ஒரு சட்டத்தை அமல்படுத்தியது. அதாவது, தேர்தல் ஆணையருக்கு எதிராக எந்தவொரு வழக்கோ அல்லது நீதி விசாரணையோ நடத்தக் கூடாது என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது.
இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதால், இவர்கள் தைரியமாக வாக்குத்திருட்டில் ஈடுபடுகின்றனர். வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மூலம் பாஜக வாக்குத்திருட்டில் ஈடுபடுகிறது என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தில் வாக்குரிமைப் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. 1300 கிலோ மீட்டருக்கு 20 மாவட்டங்களிடையே நடைபெறும் இந்த பேரணி, செப்டம்பர் 1ஆம் தேதி பாட்னாவில் நிறைவடையவுள்ளது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டில் நடைபெறவுள்ளது. ஆனால், இன்னும் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பிகாரில் வெற்றி, தோல்வி அடைந்த தொகுதிகளைப் பிரித்து 243 தொகுதிகளிலும் பாஜக ஆலோசனைக் கூட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.