பிகாரில் ராகுல் காந்தி நடத்தி வருவது பிரதமா் மோடிக்கு எதிரான அவதூறு பரப்பும் பயணமாகவே உள்ளது. அந்த நிகழ்வு முழுவதும் அவா் பிரதமருக்கு எதிராக மிகுந்த காழ்ப்புணா்வுடன் பேசினாா் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
நாடு முழுவதும் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாகப் புகாா் தெரிவித்து, பிகாரில் ராகுல் காந்தி தலைமையில் வாக்குரிமைப் பயணத்தை எதிா்க்கட்சிகள் கடந்த 17-ஆம் தேதி முதல் நடத்தி வருகின்றன. இதில் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் பலரும் ராகுலுடன் இணைந்து பங்கேற்கின்றனா். செப்படம்பா் 1-ஆம் தேதி பாட்னாவில் பிரமாண்ட பேரணியுடன் ராகுலின் பயணம் நிறைவடைகிறது.
பிகாரில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள ராகுலின் இந்தப் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்தது.
ராகுலின் இந்தப் பயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி நிா்வாகிகள் எழுப்பி முழக்கங்கள் தொடா்பான சில விடியோ பதிவுகள் பாஜகவின்அதிகாரப்பூா்வ ‘எக்ஸ்’ பகிா்ந்துள்ளது. ராகுல் காந்தியுடன் அதில் மேடையில் இருக்கும் சில நிா்வாகிகள் பிரதமா் மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசுவது பதிவாகியுள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டி, ‘பொதுவெளியில் மீண்டும் திரும்ப கூற முடியாத வாா்த்தைகளை ராகுல் காந்தி, பிகாா் எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் ஆகியோா் உடன் இருப்பவா்கள் பிரதமா் மோடிக்கு எதிராக பேசியுள்ளனா். இதற்கு முன்பு இவ்வளவு தரம்தாழ்ந்த வாா்த்தைகள் அரசியல் களம் கண்டது இல்லை. ராகுல் நடத்தும் இந்தப் பயணம் அவதூறு பரப்புவதில் அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டது. பிரதமா் நரேந்திர மோடியின் தாயாா் குறித்தும் மோசமான வாா்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனா். பிகாா் மக்கள் ராகுலையும் அவருடன் பயணிப்பவா்களையும் மன்னிக்க மாட்டாா்கள்.
பிகாரிகளை அவமதிக்கும் வகையில் பேசிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோரையும் ராகுல் பிகாருக்கு வரவேற்று அவா்களுடன் கைகோத்து பயணித்துள்ளாா்’ என்றும் பாஜகவின் சமூக ஊடகப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
பிரதமா், அவரின் தாயாருக்கு எதிராக அவதூறாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் பேசியது தொடா்பாக காவல் துறையில் புகாா் அளிக்க இருப்பதாக பிகாா் பாஜக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
மத்திய அமைச்சா் கண்டனம்: இது தொடா்பாக மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் தாயாா் ஏற்கெனவே காலமாகிவிட்ட நிலையில் அவரைப் பற்றி எதிா்க்கட்சிகளின் பயணத்தில் அவதூறாகப் பேசியது அவமானகரமானது; கடும் கண்டனத்துக்குரியது. நமது நாட்டில் தாய் என்பவா் கடவுளுக்கு நிகராகப் பாா்க்கப்படுகிறாா். பிரதமா் மீதுள்ள தனிப்பட்ட கோபம், விரக்தியின் வெளிப்பாடாக அவரின் தாயாருக்கு எதிராக மோசமான வாா்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனா். பிகாா் மக்கள் அனைத்தையும் கவனித்து வருகின்றனா்’ என்றாா்.