நாட்டைவிட்டு தப்பியோடிய 15 பொருளாதார குற்றவாளிகளால் ரூ. 58,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், நாட்டைவிட்டு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் குறித்தும், அவர்களால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மக்களவை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி எழுத்துப்பூர்வ பதிலை திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:
”தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்பட 15 பேர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018-ன் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூகோ வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி மற்றும் இந்தியன் வங்கி உள்ளிட்ட 12 அரசு வங்கிகளிடம் இருந்து ரூ. 58,082 கோடி கொடுக்க வேண்டியுள்ளது. இதில், ரூ. 26,645 கோடி அசல் மற்றும் ரூ. 31,437 கோடி வட்டி அடங்கும்.
இவர்களிடம் இருந்து இதுவரை சுமார் ரூ. 19,187 கோடி மதிப்பிலான சொத்துகளை வங்கிகள் பறிமுதல் செய்துள்ளன. மொத்த தொகையில் 33 சதவீதம் ஆகும்.
தப்பியோடிய 15 பேரில் இருவர் ஏற்கெனவே வங்கிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ளவர்களிடம் இருந்து பணத்தை மீட்க சொத்து பறிமுதல், நாடு கடத்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.