இலங்கைக்கு நிவாரண பொருள்களை அனுப்ப வான்வெளியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கவில்லை என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டை இந்தியா செவ்வாய்க்கிழமை மறுத்தது.
மேலும், பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று 4 மணி நேரத்தில் அனுமதி வழங்கியதாகவும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் சுமத்துவதாகவும் இந்தியா தெரிவித்தது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு விமானங்கள் மூலம் நிவாரணப் பொருள்களை கொண்டுசெல்ல வான்வெளியை பயன்படுத்திக்கொள்ள இந்தியா அனுமதிக்கவில்லை என பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.
இதற்கு இந்திய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்திய வான்வெளியைப் பயன்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் தரப்பில் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணிக்கு அனுமதி கோரப்பட்டது. அன்றைய தினமே மாலை 5.30 மணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. வழக்கம்போல் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் ஊடகங்கள் சுமத்துகின்றன.
பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க இந்திய விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளபோதும் மனிதநேய உதவிகளை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா அனுமதி வழங்கியது என்றனா்.