லியோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணியுடனான நட்புறவு கால்பந்து போட்டிக்காக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் கிரிக்கெட்டின் வலையில் சிக்கியிருந்தாலும் கால்பந்துக்கென மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.
இந்த நிலையில், இந்திய கால்பந்து ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக உலகக்கோப்பையை வென்ற ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது அணி வீரர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் ‘கோட் இந்தியா டூர்’ - G.O.A.T. India Tour பயணத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்தப் பயணத்தில் தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அவர்கள் கலந்து கொண்டு விளையாடவுள்ளனர்.
இந்த சுற்றுப்பயணம் டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், டிசம்பர் 13 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் தெலங்கானா அணிக்கு எதிரான நட்புறவு கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக, தெலங்கானா அணியில் முதல்வர் ரேவந்த் ரெட்டியும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் தினந்தோறும் தீவிர கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதுதொடர்பான விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தி கோட் மெஸ்ஸியை ஹைதராபாத் மண்ணுக்கு வரவேற்க ஆவலுடன் உள்ளேன். உங்களைப் போன்ற ஜாம்பவானைப் பார்க்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இது உன்னதமான தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இளம் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட ரேவந்த் ரெட்டி, 9 ஆம் எண் அச்சிட்ட ஜெர்ஸியுடன் பயிற்சி மேற்கொண்டார். அதன்பின்னர், அங்கிருந்த வீரர்களுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டனார்.
இந்தப் படங்கள், விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், ‘RR 9 vs M10’ என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.