எனது வாழ்க்கையின் பல தருணங்களில் பரிபூரண ஒழுங்கின்மை (Perfect Chaos) இருந்திருக்கிறது. இந்தப் பரிபூரண ஒழுங்கின்மை இப்போதும் என் வாழ்க்கையில் இருக்கிறது. ஏனெனில் அது நானேதான்! ~ நெய்மர் ஜூனியர்.
இந்தப் பாழாய்போன கால்பந்து உலகம் மெஸ்ஸி - ரொனால்டோ என்று சண்டையிட்டுக் கிடக்கிறது. உண்மையில் இந்தப் பிரிவு மெஸ்ஸி - நெய்மர் என்று பிரிந்திருக்க வேண்டும். ரொனால்டோ தனது கடின உடற்பயிற்சியாலும் தன்னம்பிக்கை மிகுதியாலும் நெய்மரின் இடத்தைப் பிடித்து மெஸ்ஸிக்குப் போட்டியாளராக மாறியுள்ளார்.
நெய்மர் மட்டும் லௌகீக வாழ்கையைப் புறக்கணித்து உடலை கொஞ்சம் சரியாக வைத்திருந்தால் அல்லது அப்படி அமைந்திருந்தால் இந்த உலகம் அவரைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்திருக்கும்! நெய்மருக்குப் போட்டியாளர்கள் என்று யாருமே இருந்திருக்கவும் மாட்டார்கள்!
நெய்மருக்காக ஃபிஃபா தனது பெனால்டி விதியை மாற்றியது. கால்பந்து வரலாற்றிலேயே அதிக தொகைக்கு விற்கப்பட்ட வீரரும் நெய்மர்தான். பிறகு ஏன் காணாமல் போனார்?
பிரேசில் நாட்டில் மோசிடஸ் குரூசிஸ் எனும் ஊரில் 1992-ல் நெய்மர் பிறக்கிறார். குப்பைமேடான அந்த ஊரின் தெருக்களிலும் கடற்கரை மணலிலும் அவர் விளையாடி இருக்கிறார். அவரது தந்தையின் அடிச்சுவட்டைப் பின் தொடர்ந்த நெய்மருக்கு 13 வயதிலேயே பிரேசில் ஜாம்பவான் பீலே விளையாடிய சந்தோஷ் எஃப்சியில் வாய்ப்பு கிடைக்கிறது.
நெய்மர் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது அவரது ட்ரிபிளிங்கும் (Dribbling) ’ரெயின்போ ப்ளிக்- rainbow flick’கும்தான். மிகவும் அழகான கவித்துவமான அவரது ஆட்டத்துக்கு தனியான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்தத் திறமைக்குக் காரணம் அவர் சிறிய வயதில் ஃபுட்சல் என்ற விளையாட்டை விளையாடியதுதான். ஃபுட்சல் என்பது ஒரு சிறிய கட்டத்திற்குள் கால்பந்து விளையாடுவது. அதில் எப்படி எதிரணியை ஏமாற்றி கோல் அடிப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. இந்த அடிப்படையே அவரை துல்லியமான ட்ரிபிளிங் செய்ய பிற்காலத்தில் உதவியது.
ஓராண்டில் அதிக ட்ரிபிளிங் செய்தவர்களில் நெய்மர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.
1. நெய்மர் - 335 (பார்சிலோனா, பிஎஸ்ஜி, 2017)
2. லாமின் யமால் - 307 (பார்சிலோனா, 2025)
3. லியோனல் மெஸ்ஸி - 260 (பார்சிலோனா, 2017)
இதுவரையான ஒட்டுமொத்த ட்ரிபிளிங் கணக்கில் மெஸ்ஸி யாவரும் எட்டாத தூரத்தில் முதலிடத்தில் தனித்து நிற்கிறார். இந்த நிலைத்தன்மைதான் (Consistency) நெய்மரிடம் பிரச்னையாக இருக்கிறது.
சந்தோஷ் எஃப்சி: 2009 - 2013 (4 ஆண்டுகள்)
136 கோல்கள்+ 65 அசிஸ்ட்ஸ் - 201
எஃப்சி பார்சிலோனா: 2013 - 2017 (4 ஆண்டுகள்)
105 கோல்கள்+ 76 அசிஸ்ட்ஸ் - 181
பிஎஸ்ஜி: 2017- 2023 (6 ஆண்டுகள்)
118 கோல்கள்+ 77 அசிஸ்ட்ஸ் - 195
அல் - ஹிலால்: 2023-2025 (2 ஆண்டுகள்)
3 போட்டிகளில் 0 கோல்கள்.
சந்தோஷ் எஃப்சி: (2025 - 2026 டிசம்பர் வரை ஒப்பந்தம்)
11 கோல்கள் + 4 அசிஸ்ட்ஸ் - 15
தனித்துவம்
ஒருவேளை நெய்மர் பார்சிலோனாவுக்கு பதிலாக ரியல் மாட்ரிட் அணியில் விளையாடி இருந்தால்? ரசிகர்கள் அதிகம் கொண்டாடி இருப்பார்களா?
மெஸ்ஸியுடன் விளையாட விரும்பியதால் மட்டுமல்லாமல் அவர் வெளியே சொல்லாத மற்ற காரணங்களும் இங்கு இருப்பதாகவே நினைக்கிறேன்.
நெய்மருக்கு ரொனால்டிங்கோ, கர்ரீன்ஜா, ஜிடானே, மெஸ்ஸி என்று பலரையும் பிடிக்கும். ஆனால் அவரது குரு என்றால் அது ராபின்ஹோதான். நெய்மரின் விளையாட்டு பாணியும் சில வித்தைகளும் இவரிடம் இருந்தே வந்திருக்கிறது.
ராபின்ஹோவை ரியல் மாட்ரிட் அணி சரியாக பயன்படுத்தாதது நெய்மருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். சிறிய வயதில் ரியல் மாட்ரிட் அணியில் விளையாட முயற்சித்து அது நடக்காததும் அவருக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.
நெய்மரின் பலமும் பலவீனமும் அவரது மனம்தான். எப்போதும் வித்தியாசமாக இருக்க நினைப்பதே அவரது சுபாவம். அதுதான் அவரை கால்பந்தில் தனித்துவமாக்கியுள்ளது. பொதுவாக அனைவருக்குமே இந்தக் குணம் சிறிதாவது இருக்கும். நெய்மருக்கு சிறிய வயதில் இருந்தே இந்தப் பழக்கம் இருக்கிறது என்பதை அவரே நேர்காணலில் கூறியிருக்கிறார்.
காலணிகளுக்கு தானே சுயமாக வண்ணம் தீட்டுவது முதல் ’ரெயின்போ ப்ளிக்’, பெனால்டியில் புதுமை என அதுவே அவரது அடையாளமாகவும் மாறின.
ஒரு நேர்காணலில், "நான் எப்போதும் தனித்து தெரிய நினைக்கிறேன். நான் விளையாட வந்தால் மக்கள் என்னை தனியாகப் பார்க்க வேண்டும். அதுதான் அவர்களும் விரும்புகிறார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே விளையாட முடியும்" என்றார்.
இந்தக் குணம் கால்பந்து திடலுக்கு உள்ளேயும் வெளியேயும் நெய்மரிடம் இருந்தது. திருமணம் செய்யாமலே குழந்தைகளுக்குத் தந்தையான இவர் ஊடகங்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டார்.
காதல் மன்னன்
2010-11: கரோலினா டான்டாஸ். இவர்களுக்கு 2011-ல் டேவி லூக்கா எனும் மகன் பிறந்தான்.
2013 -18: ப்ரூனா மார்க்வெஸ். பிரேசில் நடிகையான இவருடன் நெய்மர் சுமார் ஐந்தாண்டுகள் காதலில் இருந்தார். பிஎஸ்ஜிக்கு மாறியதும் இந்தக் காதல் முறிவுற்றது.
2021- 23: புருனா பியான்கார்டி. பிரேசிலின் சமூக ஊடக இன்ப்ளூயன்சரான இவருடன்தான் நெய்மர் நீண்ட காலமாக வாழ்கிறார். இவர்கள் 2023-ல் பிரிந்ததாக தகவல் வெளியாகியது.
2023-24: அமண்டா கிம்பர்லி. பிரேசில் நடிகையான இவருடன் ஓராண்டு மட்டும் காதலில் இருந்து ஹெலானா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்.
2025 முதல்: புருனா பியான்கார்டி. பிரிந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இவர்கள் மீண்டும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மவியா (2023) எனும் குழந்தையும் 2025-ல் மற்றுமொரு குழந்தையும் பிறந்துள்ளது.
இதற்கிடையில் 2011, 2014-ல் பலருடன் காதலில் ஈடுபட்டதாக வதந்திகள் பரவின.
தனது சொந்த கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்காவே ஒரு அகாடமியை ஆரம்பித்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நெய்மர் தனது குழந்தைகளுக்கும் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.
விடாமுயற்சி
பிரேசில் நாட்டிற்காக அதிக கோல்கள் அடித்தவர்களில் நெய்மர் (79 கோல்கள்) முதலிடத்தில் இருக்கிறார். நீண்ட காலமாக விளையாடாவிட்டாலும் அந்த சாதனை அப்படியே இருக்கிறது.
உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக அசிஸ்ட் செய்தவர்களில் மெஸ்ஸி (61) முதலிடத்தில் இருக்க, நெய்மர் (59) இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரேசில் அணியில் கடைசியில் பெனால்டியில் கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
கால்பந்து வரலாற்றிலேயே (220 மில்லியன் யூரோ) அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளார். நெய்மரின் தகுதிக்கு இது ஒன்றும் பெரியதில்லை என பயிற்சியாளர் மொரின்ஹோ கூறியுள்ளார்.
நெய்மர் வேகமாக வந்து சற்று நின்று கோல் அடிப்பதால் பெனால்டியில் கோல்கீப்பர்கள் தடுமாறினார்கள். இதனால், ஃபிஃபா பெனால்டியில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இருந்தும் நெய்மர் பெனால்டி விதியிலுள்ள ஓட்டையைப் பயன்படுத்தி கோல் அடிக்கிறார். மிகவும் மெதுவாக ஓடி வரும் நெய்மர் கோல் கீப்பரின் முழங்காலையும் இடுப்பு அசைவுகளையும் கவனித்து கடைசி நேரத்தில் அதற்கேற்ப கோல் அடிக்கிறார்.
இவையெல்லாம் நெய்மர் தனது காயங்களுக்கு இடையே நிகழ்த்திய சாதனைகள்தான். உடல் நலனுடன் இருந்திருந்தால்? அவரது சாதனைகள் எங்கேயோ சென்றிருக்கும்!
பலரும் 2015 சாம்பியன்ஸ் லீக் போட்டிதான் நெய்மரது சிறந்த போட்டி என்பார்கள். அவரது மேஜிக்கான போட்டிகள் எல்லாம் சந்தோஷ் கிளப்பிலே முடிந்து விட்டன.
மெஸ்ஸிக்கு எப்படி ரியல் மாட்ரிட் வீரர்கள் ஒரு போட்டியில் உயிரை எடுக்க முயற்சித்தார்களோ அப்படி கோபா அமெரிக்கா 2021 இறுதிப்போட்டி நெய்மருக்கு. ஆர்ஜென்டீன வீரர்களே நெய்மரை “அனிமல்” எனப் பாராட்டினார்கள். போட்டிக்குப் பிறகு நெய்மரும் மெஸ்ஸியும் ஒன்றாக அமர்ந்து பேசிய காட்சிகள் நட்புக்கு இலக்கணமானது!
தனது சிறுவயது அணியான சந்தோஷ் அணியை ரிலிகேஷனில் (Relegation) இருந்து காக்க கடந்தாண்டில் காயத்துடனே விளையாடினார். கடைசி 5 போட்டிகளில் 5 கோல்கள், ஒரு அசிட்ஸ் செய்து அணியைக் காப்பாற்றினார்.
மகுடம் சூடாத இளவரசன்
நெய்மருக்கு அதிகமாக பார்டிக்களில் கலந்துகொள்ளும் பழக்கமும் மது அருந்தும் பழக்கமும் இருக்கிறது. மிகவும் கொண்டாட்ட மனநிலை கொண்ட மனிதர் என்பதால் அது அவரது உடலையும் மிகவும் பாதித்தது. இதனால், அதிகமாக காயம் அடைவதும் அதில் இருந்து மீள்வதும் நீண்ட நாள்கள் எடுக்கின்றது.
சௌதி அரேபியாவுக்குச் சென்ற நெய்மர் இரண்டு ஆண்டுகளில் வெறுமனே மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 2023-ல் ஏசிஎல் தசைக் கிழிவினால் மிகவும் அவதிக்குள்ளானார்.
காயத்தையும் நெய்மரின் கால்பந்து பயணத்தையும் பிரிக்கவே முடியாது. உலகக் கோப்பைப் போட்டிகளிலும் இதனால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். இப்போதும் முழங்காலில் ஒரு அறுவைச் சிகிச்சையை முடித்து நலம்பெற்று வருகிறார்.
நெய்மருக்கு மட்டும் தொடர்ச்சியாக காயங்கள் ஏற்படாமல் இருந்தால், மெஸ்ஸியின் அழகியலையும் ரொனால்டாவின் சாதனைகளையும் இவர் தனியாளாக விஞ்சியிருப்பார். அதனால்தான் ரசிகர்கள் இவரை ‘மகுடம் சூடாத இளவரசன்’ என்கிறார்கள்.
சந்தோஷ் அணியில் கடந்த டிசம்பரில் ரசிகர் ஒருவர் நெய்மரிடம், “வேண்டுமானால் எனது முழங்காலை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நீண்ட காலம் விளையாட வேண்டும்” என்றார். அதற்கு நெய்மர், “அப்படியானால், எனக்கு இரண்டு முழங்கால்களும் வேண்டுமே” என கேலியாகப் பதில் அளிப்பார்.
ஒரு தொழிலதிபர் தனது உயிலில் நெய்மருக்காக 752 மில்லியன் பவுண்ட் சொத்தினை அன்பளிப்பாக வழங்கியதாக கடந்தாண்டு செய்திகள் வெளியாகின.
2026 கால்பந்து உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் நெய்மருக்கு உடல் நலனில் எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதே இந்தப் பிறந்தநாளில் அவரது ரசிகர்களின் பிரார்த்தனையாக இருக்கிறது.
வரலாற்றில் தோல்வியுற்றவர்களைப் பற்றி இந்த உலகம் பேசாது. இருந்தும் நெய்மர் கால்பந்து இருக்கும்வரை இருப்பார். அவர் தனது முழுமையான திறனை வெளிப்படுத்தாமல் இருந்தாலும் அவர் கால்பந்தின் அற்புதம்தான்!
[நெய்மர் ஜூனியர் பிறந்த நாள், பிப்.5]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.