இந்தியாவில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 72,000-க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பதிலளித்த மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுகந்தா மஜும்தார், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் திட்டத்தின் மூலம் 8 பொது கல்வி நிறுவனங்களுக்கு சிறந்த நிறுவன அந்தஸ்து வழங்க ரூ.6,198.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து சுமார் 54 இந்திய கல்வி நிறுவனங்கள் கியூ எஸ் உலக பல்கலைக்கழக மதிப்பீட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசியதாவது:
“இந்தியாவில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 72,218 வெளிநாட்டு மாணவர்கள் வெவ்வேறு படிப்புகளைப் பயின்று வருகின்றனர். உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 10 உயர் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 8 பொதுக்கல்வி நிறுவனங்கள் மற்றும் 4 தனியார் நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
இத்துடன், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுடன் இந்திய கல்வி நிலையங்களின் தொடர்புகளை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் சுட்டுக்கொலை! காவல் அதிகாரி ஒருவர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.