ஒடிசாவின் புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.3.4 கோடியை நன்கொடையாக வழங்கிய 100 வயதான மருத்துவர் கே. லக்ஷ்மி பாயை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டியுள்ளார்.
ஒடிசாவின் பெர்ஹம்பூரைச் சேர்ந்த பெண் மருத்துவர் கே. லக்ஷ்மி பாய். இவர் தனது 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்நாள் சேமிப்பான ரூ.3.4 கோடி முழுவதையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிக்க புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நன்கொடை வழங்கிய மருத்துவர் லக்ஷ்மிக்கு புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், மருத்துவர் லக்ஷ்மி பாயிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் இன்று (டிச. 5) பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, குடியரசுத் தலைவர் முர்மு வெளியிட்டுள்ள செய்தியில்:
“பெண்களின் முன்னேற்றத்திற்கு இது ஒரு மிக முக்கியமான படியாகும். உங்கள் சிந்தனைமிக்க செயலை நான் மிகவும் பாராட்டுகிறேன். அனைவருக்கும் சுகாதார சேவையை வழங்க அரசுகள் செயல்பட்டு வருகின்றன. உங்களைப் போன்ற தாராள மனப்பான்மை கொண்ட குடிமக்களின் பங்கேற்பு அரசின் முயற்சிகளை ஆதரிக்க மற்றவர்களையும் ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்.
கல்வி ஒரு தனிநபருக்கு எப்படி பயனளிக்கும் என்பதற்கு உங்களது வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, கட்டாக் மாவட்டத்தில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் கடந்த 1950 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர் கே. லக்ஷ்மி பாய், அமெரிக்காவில் பெண்கள் நலன் குறித்த பல்வேறு மருத்துவப் படிப்புகளையும் பயின்றுள்ளார்.
மேலும், ஒடிசாவில் லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சை முறையை கற்றுக்கொண்ட முதல் பெண் மருத்துவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: புதினுக்கு பகவத் கீதை அன்பளிப்பு! பிரதமர் மோடி சநாதன தர்மத்தின் தூதர்: கங்கனா ரணாவத் பேச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.