சர்தார் வல்லபபாய் படேல், அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய தலைவர்களின் தேசப் பங்களிப்பை காங்கிரஸ் மூடி மறைத்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவைக் கொச்சைப்படுத்துவதே மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியின் முக்கிய நோக்கம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், சோனியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது பெயரைக் குறிப்பிடாமல் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் நிறுவனத்தை சட்டவிரோதமாக கைப்பற்றியதற்காக நேரு குடும்பத்தினருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேருவின் புகழைக் குலைக்கும் விவகாரத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் அவரது குடும்பத்தினரை (சோனியா காந்தி, ராகுல் காந்தி) விட யாரும் எதுவும் கூடுதலாகச் செய்திருக்க முடியாது. நேருவின் பெயரைக் கொச்சைப்படுத்த அவர்கள் முயற்சிப்பதைவிட வேறு யார் முயற்சிக்கப் போகிறார்கள்?
நேருவின் பரம்பரையைக் காப்பதற்காக சர்தார் வல்லபபாய் படேல், அம்பேத்கர், நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் ஆகிய தலைவர்களின் தேசப் பங்களிப்பை காங்கிரஸ் மூடிமறைத்தது. நேரு குடும்பத்தினரை அரசியலில் ஊக்குவிக்கும் செயலை சோனியா காந்தி கைவிட வேண்டும்.
வந்தே மாதரம் பாடல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் நடைபெறும்போது நேரு தொடர்பான உண்மைகள் அனைவருக்கும் தெரிய வரும். அவர் மீண்டும் அம்பலப்படுத்தப்படுவார்.
நேருவின் புகழை சீர்குலைக்கவும் வரலாற்றை மாற்றி எழுதவும் பாஜக முயற்சிப்பதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வரலாற்றை மாற்றி எழுத பாஜக முயற்சிக்கவில்லை. நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அனைத்து தேசத் தலைவர்களுக்கும் உரிய அங்கீகாரம் அளிப்பதை உறுதிப்படுத்தவே பாஜக முயற்சிக்கிறது.
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்களிப்பும் ஆற்றாத சித்தாந்தத்தைக் கொண்டவர்கள் (பாஜகவினர்) நேரு மீது குற்றம்சுமத்துவதாக சோனியா காந்தி கூறியுள்ளார். நம் நாட்டைச் சேர்ந்தவர் அல்லாத அவரிடம் இருந்து இந்தக் கருத்து வந்துள்ளது. அன்டோனியா மெய்னோ என்ற இயற்பெயரைக் கொண்ட சோனியாவும் அவரது குடும்பத்தினரும் இந்தியாவின் சுதந்திரத்துக்கு என்ன செய்தனர் என்ற எதிர்கேள்வியை இந்த நாடு எழுப்பும்.
நம் நாட்டில் இருக்கும் நாம் அனைவரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாட்டின் சுதந்திரத்துக்கு பங்களித்துள்ளோம். ஆனால் நீங்கள் (சோனியா) இந்த நாட்டைச் சேர்ந்தவரே அல்ல. எனவே சுதந்திரத்துக்கு எங்களது பங்களிப்பு என்ன என்று நீங்கள் கேட்கக் கூடாது.
நேரு குடும்பம் மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டுள்ளதாக சோனியா கூறியுள்ளார். நேரு தவறான மதச்சார்பின்மை உணர்வைக் கொண்டிருந்தார். ஏனெனில், வந்தே மாதரம் பாடல் முஸ்லிம்களுக்கு எரிச்சலூட்டும் என்று அவர் ஒருமுறை கூறினார்.
கடவுள் ராமர் இல்லை என்ற மதச்சார்பின்மை விளக்கத்தையே நேரு கொண்டிருந்தார். வந்தே மாதரம் பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும்போது அவரைப் பற்றிய அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்று சம்பித் பத்ரா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.