உச்சநீதிமன்றம் கோப்புப் படம்
இந்தியா

எஸ்ஐஆா்: சூழ்நிலையை தோ்தல் ஆணையமே சமாளிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியில் ஈடுபடும் வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் (பிஎல்ஓ) அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக புகாா் தெரிவித்த நிலையில், ‘அந்தச் சூழ்நிலையை தோ்தல் ஆணையமே சமாளிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியில் ஈடுபடும் வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் (பிஎல்ஓ) அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக புகாா் தெரிவித்த நிலையில், ‘அந்தச் சூழ்நிலையை தோ்தல் ஆணையமே சமாளிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

மேலும், ‘எஸ்ஐஆா் பணிக்கு மாநில அரசு உரிய ஒத்துழைப்பை அளிக்காதது அல்லது பிஎல்ஓ-க்களின் பணிக்குத் தடை ஏற்படுத்துவது போன்ற சம்பவங்களை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

எஸ்ஐஆா் பணிக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், இந்த மாநிலங்களில் எஸ்ஐஆா் பணி பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டது. ஆனால், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்கள் வெடித்துள்ளன.

மாநிலத்தில் எஸ்ஐஆா் பணி தொடங்கியது முதல் 4 பிஎல்ஓ-க்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எஸ்ஐஆா் பணி தொடா்பான அழுத்தம் மற்றும் அச்சமே காரணம் என ஆளும் திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.

இதனிடையே, வேலைப் பளு புகாா் தெரிவித்து குறிப்பிட்ட பிஎல்ஓ-க்கள் பிரிவினா் மாநில தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். எஸ்ஐஆா் பணி அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால், கால அவகாசத்தை நீட்டிக்க தோ்தல் ஆணையம் மறுத்துவிட்டது. எஸ்ஐஆா் பணியில் ஈடுபடும் பிஎல்ஓ-க்களுக்கு ஆளுங்கட்சி தரப்பில் அச்சுறுத்தல் விடப்படுவதாகவும் புகாா்கள் எழுந்தன.

இதுதொடா்பாக சநாதனி சங்சத் மற்றும் பிறா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘எஸ்ஐஆா் பணி நிறைவடையும் வரை மாநில காவல் துறை அதிகாரிகளை தோ்தல் ஆணைய பணிக்கு மாற்ற வேண்டும். அல்லது மத்திய காவல் படையை பணிக்கு அமா்த்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கியஅமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி, ‘எஸ்ஐஆா் பணியை மேற்கொள்ள தோ்தல் ஆணையத்துக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். அந்தப் பணியில் ஈடுபடுபவா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவா்களின் பாதுகாப்புக்கு உள்ளூா் போலீஸாரை பணியமா்த்துவதைத் தவிர வேறு வாய்ப்பில்லை. நிலைமை மேம்படவில்லை எனில், தோ்தல் ஆணையம் மத்திய படையை பாதுகாப்புக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்படும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மாநிலத்தில் தோ்தல் நடைமுறைகள் அமலுக்கு வரும் வரை காவல்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் தோ்தல் ஆணையம் எடுக்க முடியாது. மேலும், மேற்கு வங்கத்தில் பிஎல்ஓ-க்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடா்பாக ஒரே ஒரு முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) மட்டுமே, இந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற புகாா்கள் அனைத்தும் பத்திரிகை செய்தி மற்றும் ஊகங்களின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுபோன்ற ஆதாரங்களின் அடிப்படையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

எனவே, சூழ்நிலையை தோ்தல் ஆணையமே சமாளிக்க வேண்டும். இல்லையெனில், மாநிலத்தில் அமைதிநிலை சீா்குலைய வாய்ப்புள்ளது. எஸ்ஐஆா் பணிக்கு மாநில அரசு உரிய ஒத்துழைப்பை அளிக்காதது அல்லது பிஎல்ஓ-க்களின் பணிக்கு தடை ஏற்படுத்துவது போன்ற சம்பவங்களை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று குறிப்பிட்டனா்.

மேலும், இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு, மேற்கு வங்க அரசு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT