கொல்கத்தாவில் சமீபத்தில் நடைபெற்ற கீதை பாராயண நிகழ்ச்சியில் விற்பனையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாகக் கண்டித்துள்ளார்.
நடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் மமதா பேசினார்.
கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் பகவத் கீதை பாராயண நிகழ்ச்சியில் சில்லறை விற்பனையாளர்கள் தாக்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
இது உத்தரப் பிரதேசம் அல்ல. மேற்கு வங்கம். விற்பனையாளர்களைத் தாக்குவது போன்ற அச்சுறுத்தல் செயல்கள் மாநிலத்தில் பொறுத்துக்கொள்ளப்படாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்திற்குள் வகுப்புவாதப் பிளவை ஏற்படுத்தும் ஒரு கலாசாரத்தை புகுத்த பாஜக முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். நான் வகுப்புவாதப் பிரிவினைகளை நம்புவதில்லை. அனைத்து மதத்தினருடன் இணைந்து பயணிக்க விரும்புகிறேன்.
கீதையைப் படிப்பதற்காக மட்டும் ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? கடவுளை வணங்குபவர்களும், அல்லாஹ்விடம் ஆசி பெறுபவர்களும் அதைத் தங்கள் இதயங்களில் செய்கிறார்கள் என்றார்.
கீதை உச்சரிப்பவர்களிடம் நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். தர்மத்தைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் என்ன சொன்னார். தர்மம் என்பது நிலைநிறுத்துவது, பிரிப்பது அல்ல, பாஜவினர் மேற்கு வங்கத்தை அழிக்க விரும்புகிறார்கள். மாநிலத்தைக் கைப்பற்றி மக்கள் வங்க மொழியில் பேசுவதைத் தடுக்க விரும்புகிறார்கள். நாம் அனைவரும் கீதையைப் படிக்கிறோம், பாராயணம் செய்கிறோம் அதற்காக ஒரு கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். இவ்வாறு அவர் பேசினார்.
டிசம்பர் 7 அன்று கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் பிரம்மாண்ட முறையில் சுமார் 5 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பகவத் கீதையை வாசித்தனர். இந்த நிகழ்ச்சியில் கொல்கத்தாவின் டாப்ஸியா மற்றும் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள ஆராம்பாக் ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு உணவு விற்பனையாளர்கள் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.