மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மாற்றுவதற்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றாக 'வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்ட' (The Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) - VB GRAM G) மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
இந்தப் புதிய மசோதாவின்படி பெயர் மாற்றப்பட்டதுடன், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டமாக மாற்றப்பட உள்ளது. மேலும் மத்திய அரசு இதற்கு முழுவதுமாக நிதி அளித்து வரும் நிலையில், இனி மாநில அரசு 40% நிதி வழங்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்று நாடாளுமன்ற மக்களவையில் இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
"மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள திட்டத்தை மாற்றுவது ஏன்? அதிக ஊதியம், அதிக வேலை நாள்கள் என்று கூறுவது மக்களின் ஏமாற்றுவதற்கே. இந்த மசோதா கிராம பஞ்சாயத்துகளின் அதிகாரத்தை பலவீனப்படுத்துகிறது. இது தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் மாநிலங்கள் 40% நிதியளிக்கக் கூறும் இந்த மசோதா அதிகாரத்துவமிக்கது.
அவையின் ஆலோசனையைப் பெறாமல் எந்த விவாதமும் நடத்தாமல் இந்த மசோதாவை அவசரமாக நிறைவேற்றக் கூடாது. இந்த மசோதாவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அரசாங்கம் ஒரு புதிய மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி என் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல, ஆனாலும் அவர் என் குடும்ப உறுப்பினர் போன்றவர். காந்தி ஒட்டுமொத்த தேசத்தின் உணர்வு. இந்த மசோதா மேலும் விரிவாக விவாதிக்கப்படுவதற்காக நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும். பாரபட்சத்தின் காரணமாக ஒருவரின் விருப்பப்படி எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படக் கூடாது" என்று பேசினார்.
தொடர்ந்து திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோர் இந்த மசோதாவுக்கு எதிராகப் பேசிய பிறகு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்தார்.
நேற்று இந்த மசோதா குறித்து செய்தியாளர்களுடன் பேசிய பிரியங்கா காந்தி, "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு ஏன் முயற்சிக்கிறது என்று தெரியவில்லை. ஒரு திட்டத்தின் பெயரை மாற்றுவதனால் எவ்வளவு செலவு ஆகிறது என்பது மக்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. திட்டத்தின் பெயரை மாற்றுவதனால் என்ன பலன்? இதனை யார் மாற்றுகிறார்கள்? திட்டத்தில் மகாத்மா காந்தி என்ற பெயரை நீக்குவது ஏன்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையும் படிக்க | 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டம்: நாடாளுமன்றத்தில் மசோதா விரைவில் அறிமுகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.