பனிமூட்டத்தால் சாலை விபத்து: கடும் பனிமூட்டம் காரணமாக உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த விபத்துகளில் இன்று (டிச., 16) 25 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 59 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மதுராவிலுள்ள யமுனா நெடுஞ்சாலையில் பனிமூட்டத்தால் சாலைகள் சரியாகத் தெரியாததால், வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதேபோன்று மாநிலத்தின் பிற பகுதிகளான உன்னாவ், பாஸ்தி, மீரட் மற்றும் பாரபங்கி பகுதிகளிலும் பனிமூட்டத்தால் விபத்து நேர்ந்துள்ளது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றாலும், எதிரே செல்லும் வாகனங்கள் சரியாக தென்படாததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யமுனா நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
விபத்து தொடர்பாக காவல் துறை கண்காணிப்பாளர் ஷலோக் குமார் கூறியதாவது,
''ஆக்ரா - நொய்டா இடையிலான யமுனா நெடுஞ்சாலையில் அதிகாலை 4.30 மணியளவில் விபத்து நேர்ந்துள்ளது. இதில் 8 பேருந்துகள், 3 சிறிய ரக வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.
அதிகாலையில் எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அடர் பனிமூட்டம் இருந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | 2025-ல் இந்திய எல்லைகளில் நடந்த ஊடுருவல், கைது எத்தனை?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.