அணுசக்தி துறையில் தனியார் பங்கேற்பு:
அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதியளிக்கும் 'சாந்தி' மசோதா மீது மக்களவையில் புதன்கிழமை(டிச. 17) அனல்பறக்க விவாதம் நடைபெற்றது. அதில், இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பிவைக்க எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பரிந்துரைக்கப்பட்டது.
2047-க்குள் அணுசக்தி திறனை 100 ஜிகாவாட்டாக உயா்த்தும் நோக்கில் அணுசக்தித் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. இந்த இலக்கை அடைய பல்வேறு கொள்கைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பொது-தனியாா் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அணுசக்தித் துறையில் தனியாா் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அதன் ஒரு பகுதியாக, ‘இந்தியாவின் மாற்றத்துக்கான அணுசக்தி ஆற்றலின் மேம்பாடு' என்ற பெயரிலான மசோதா கடந்த திங்கள்கிழமை மக்களவையில் அறிமுப்படுத்தப்பட்டது.
இந்த மசோதா மீது இன்று மக்களவையில் கருத்துக்கேட்பும் விவாதமும் நடத்தப்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் மசோதாவின் உள்ளடக்கத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்குப் பதிலளித்துப் பேசிய ஆளுங்கட்சி எம்.பி.க்கள் குறிப்பிடும்போது, முக்கியமாக, ‘இந்த மசோதா அணுசக்தி ஆற்றல் துறையில் அரசு மற்றும் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் என்பதால் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும்’ என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனிடையே, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதனைத்தொடர்ந்து, இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களில் ஒன்றான மேற்கண்ட மசோதா, மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.