இந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் :
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் கையொப்பமாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சு ஆரம்பமானது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து இரு நாட்டுப் பிரதமர்களும் திங்கள்கிழமை(டிச. 22) தொலைபேசி வழியாக உரையாடினர். இந்த உரையாடலைத் தொடர்ந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் அமலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து, நியூஸிலாந்துக்கான இந்திய ஏற்றுமதிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், நியூஸிலாந்தில் இந்தியப் பொருள்களின் விலை கணிசமாகக் குறையும் என்பதால் நுகர்வோரிடம் இந்தியப் பொருள்களுக்கான பயன்பாடு அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தால், வர்த்தகம், முதலீடு, புத்தாக்கம் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர வாய்ப்புகள் ஆகியவை ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, பல்வேறு துறைகளில் புத்தாக்கவியலாளர்கள், தொழில்முனைவோர்கள், விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் இளையோருக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையின் தாக்கம் இந்திய ஏற்றுமதியாளர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆண்டில் மத்திய அரசு இறுதி செய்துள்ள மூன்றாவது ‘எஃப்டிஏவாக’ நியூஸிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமைந்துள்ளது. இது 2026 புத்தாண்டுக்கான இனிப்பான செய்தியாக அமைந்திருப்பதாக ஏற்றுமதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.