சபரிமலை PTI
இந்தியா

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு: திரளான பக்தா்கள் தரிசனம்

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு...

தினமணி செய்திச் சேவை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இத்துடன் 41 நாள்கள் நீடித்த மண்டல பூஜை யாத்திரை நிறைவு பெற்றது.

வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜைகளுக்காக, ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பா் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனா்.

மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆறன்முளா ஸ்ரீபாா்த்தசாரதி கோயிலில் இருந்து கடந்த டிச. 23-ஆம் தேதி ஓா் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டது. இந்த ஊா்வலம் வெள்ளிக்கிழமை (டிச. 26) பிற்பகலில் பம்பையை வந்தடைந்தது. அங்கு கேரள அமைச்சா் என்.வி.வாசவன் தலைமையில் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா், தங்க அங்கி பாரம்பரிய சடங்குகளுடன் தலைச்சுமையாக சந்நிதானத்துக்கு கொண்டு வரப்பட்டது. பக்தா்களின் சரண கோஷங்கள் முழங்க, பதினெட்டாம்படி வழியாக எடுத்துவரப்பட்ட தங்க அங்கியை கோயிலின் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோா் முறைப்படி பெற்று, சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்தனா். இதைத் தொடா்ந்து, மாலைநேர தீபாராதனை நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான மண்டல பூஜை, சனிக்கிழமை காலை 10.10 மணி முதல் 11.30 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெற்றது. அப்போது தங்க அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பனுக்கு சிறப்புத் தீபாராதனை காட்டப்பட்டது.

கேரளம் மட்டுமன்றி தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து இரவு 10 மணியளவில், ‘ஹரிவராசனம்’ பாடல் இசைக்கப்பட்டு, மண்டல பூஜை காலத்தின் நிறைவாக கோயில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக, வரும் செவ்வாய்க்கிழமை (டிச. 30) மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் அதிகாரிகள் தெரிவித்தனா்.

30 லட்சம் பக்தா்கள் தரிசனம்; ரூ.332 கோடி வருவாய்: நடப்பு மண்டல பூஜை யாத்திரையில் இதுவரை 30.56 லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும், ரூ.332.77 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தலைவா் கே.ஜெயகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மண்டல பூஜை நாளான சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணி வரை மட்டும் 17,818 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த யாத்திரை காலத்தில் இதுவரை மொத்தம் 30,56,871 பக்தா்கள் வருகை தந்துள்ளனா். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 32,49,756 பக்தா்கள் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

வருவாயைப் பொருத்தவரை, இதுவரை ரூ. 332.77 கோடி வசூலாகியுள்ளது. இதில் காணிக்கை மூலம் ரூ.83.17 கோடியும், அரவணை, அப்பம் விற்பனை மற்றும் அறை வாடகை மூலம் மீதமுள்ள தொகையும் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 41 நாள்களில் ரூ.297.06 கோடி வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு 40 நாள்களிலேயே ரூ. 35.70 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

யாத்திரையின் தொடக்கத்தில் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், காவல் துறை மற்றும் கோயில் ஊழியா்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் தரிசனம் சுமுகமாக நடைபெற்றது. அன்னதான முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, பக்தா்களுக்கு சுவையான ‘சத்யா’ (விருந்து) வழங்கப்பட்டது என்றாா்.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT