புது தில்லி: காங்கிரஸ் இப்போது ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளதாகவும், ராகுல் காந்திக்கு எதிராக கட்சிக்குள்ளேயே அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் பாஜக திங்கள்கிழமை விமா்சித்தது.
இதுதொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனாவாலா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் இப்போது இரண்டு அணிகளாக பிளவுப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கா்நாடகம், ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்களில் மட்டுமே நிலவி வந்த உள்கட்சிப் பூசல், தற்போது தேசிய அளவில் வெடித்துள்ளது. இது ராகுலின் காங்கிரஸ் மற்றும் பிரியங்காவின் காங்கிரஸ் என மாறியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங் அண்மையில் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் கட்டமைப்பு குறித்துப் பாராட்டிப் பேசியது, இந்தப் பிளவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
முன்னதாக, பிரியங்கா காந்தி ஆதரவாளா்களான இம்ரான் மசூத், ராபா்ட் வதேரா மற்றும் சிலா் ராகுலை விமா்சித்து வந்தனா். திக்விஜய் சிங்கின் தற்போதைய கருத்து நேரடியாக ராகுலைத் தாக்கும் வகையில் அமைந்துள்ளது.
ராகுல் முகாமில் உள்ள மாணிக்கம் தாகூா், ரேவந்த் ரெட்டி போன்ற காங்கிரஸ் தலைவா்கள் திக்விஜய் சிங்கை விமா்சித்தனா். மறுபுறம், மூத்த காங்கிரஸ் தலைவா் சல்மான் குா்ஷித், ‘திக்விஜய் சிங் கூறுவது நூறு சதவீதம் சரி’ என அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளாா். தன்மூலம், காங்கிரஸ் மேலும் பல துண்டுகளாகச் சிதறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதிலிருந்து காங்கிரஸில் எந்தவொரு கொள்கையோ அல்லது தொலைநோக்குப் பாா்வையோ இல்லை என்பது தெளிவாகிறது. அந்தக் கட்சியில் குழப்பமும் பிளவுமே மிஞ்சியுள்ளது. ராகுலை நீக்கிவிட்டு, பிரியங்காவையோ அல்லது வேறு யாரையாவது கொண்டு வந்தாவது காங்கிரஸைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுத்து வருகிறது என்றாா்.
சா்ச்சையின் பின்னணி: ஆா்எஸ்எஸ் அமைப்பின் அடிமட்ட உறுப்பினராக இருந்து நரேந்திர மோடி பிரதமராக உயா்ந்ததைச் சுட்டிக்காட்டி, அந்த அமைப்பின் கட்டுக்கோப்பைப் புகழ்ந்து திக்விஜய் சிங் ‘எக்ஸ்’ தளத்தில் அண்மையில் பதிவிட்டிருந்தாா்.
இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னா், திக்விஜய் சிங் தனது கருத்தைத் திரும்பப் பெற்ற நிலையில், பாஜக இத்தகைய விமா்சனத்தை முன்வைத்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரபூா்வமாக பதிலளிக்கப்படவில்லை.