நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் எனக் கோரிய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அவரை துச்சாதனன் என மறைமுகமாக சாடியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று (டிச. 30) மேற்கு வங்க மாநிலத்துக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, கொல்கத்தாவில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் புது தில்லி ஆகிய இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறும் சமயத்தில் பயங்கரவாதிகள் ஊடுறுவியதாக மேற்கு வங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதற்கான காரணம் என்னவென்று முதல்வர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசுகையில், “இன்று துச்சாதனன் மேற்கு வங்கத்துக்கு வந்துள்ளார். எப்போதெல்லாம் தேர்தல் நடைபெறவுள்ளதோ அப்போதெல்லாம் துரியோதனன் மற்றும் துச்சாதனன் இருவரும் இங்கு வருகைத் தருவார்கள்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் மமதா மறைமுகமாக சாடியுள்ளார்.
இத்துடன், தில்லியில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதல் குறித்து பேசிய மமதா, “கடந்த சில நாள்களுக்கு முன்பு தில்லியில் ஒரு சம்பவம் நடைபெற்றது. ஊடுறுவல்காரர்கள் வங்கத்தைத் தவிர வேறு எங்கும் இல்லையா? அப்படியானால் அதைச் செய்தது நீங்கள்தானா?” என விமர்சித்துள்ளார்.
முன்னதாக, செய்தியாளர்களுடன் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பயங்கரவாதிகள் ஊடுறுவல் மேற்கு வங்கத்தின் எல்லை வழியாக நடைபெறுவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.