மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் சுமார் 60 பேர் மரணமடைந்ததாக முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
பங்குரா மாவட்டத்தில் இன்று (டிச. 30) நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட முதல்வர் மமதா பானர்ஜி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் செய்யறிவு (ஏஐ) மூலம் மோசடி செய்யப்படுவதாகவும், மேற்கு வங்க மக்கள் கொடுமை செய்யப்படுகிறார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் செய்யறிவு மூலம் மோசடி செய்யப்படுகிறது. மேற்கு வங்க மக்கள் எஸ்ஐஆர் பணிகளால் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
இதனால், சுமார் 60 பேர் மரணமடைந்துள்ளனர். ஆவண சரிபார்ப்பு விசாரணைக்காக முதியவர்கள் நேரில் அழைக்கப்படுகிறார்கள்.
சட்டப்பூர்வமான ஒரு வாக்காளரின் பெயர் நீக்கப்பட்டால்கூட தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முற்றுகையிடும். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைவதற்கு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், தேர்தல் சமயத்தில் மட்டும் சோனார் பங்களா என உறுதியளிக்கும் பாஜக, அவர்கள் ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.