சீனா மத்தியஸ்தம்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அறிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையை, வர்த்தகத்தை முன்வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை தெரிவித்துள்ளார்.
ஆனால், பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதால்தான் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்தியதாக இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தப்பட்ட விவகாரத்தில் எந்த மூன்றாம் தரப்பு தலையீடும் இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த நிலையில், சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பேசிய அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, இந்தியா - பாகிஸ்தான் சண்டைக்கு மத்தியஸ்தம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது:
“இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, இதுவரை இல்லாத அளவிலான போர்களும், எல்லைத் தாண்டிய மோதல்களும் இந்தாண்டு நடைபெற்றன. புவிசார் அரசியல் கொந்தளிப்பு தொடர்ந்து ஏற்பட்டது. நீடித்த அமைதியை உருவாக்க நாங்கள் நியாயமான நிலைப்பாட்டை எடுத்து, மூல காரணங்களை கையாள்வதில் கவனம் செலுத்தினோம்.
பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான அணுகுமுறையைப் பின்பற்றி, வடக்கு மியான்மர், ஈரானிய அணுசக்திப் பிரச்னை, பாகிஸ்தான் - இந்தியா இடையிலான மோதல், பாலஸ்தீனம் - இஸ்ரேல் போர் மற்றும் கம்போடியா - தாய்லாந்து சண்டை ஆகியவற்றுக்கு சீனா மத்தியஸ்தம் செய்தது.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.