முகப்பு
இந்தியா

சட்டவிரோத மத கட்டமைப்புகளை அகற்றும் விவகாரம்: அறிக்கை சமா்ப்பிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியின் பொது இடங்களில் உள்ள 249 சட்டவிரோத மத கட்டமைப்புகள் மற்றும் அவற்றை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை

Updated On : 7 பிப்ரவரி, 2025 at 10:05 PM
கோப்புப் படம்
பகிர்:

தில்லியின் பொது இடங்களில் உள்ள 249 சட்டவிரோத மத கட்டமைப்புகள் மற்றும் அவற்றை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு நகரத்தின் மதக் குழுவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

புது தில்லி முனிசிபல் கவுன்சில், தில்லி கன்டோன்மென்ட் வாரியம், தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் மற்றும் ரயில்வே அமைச்சகம், வனத்துறை, பொதுப்பணித் துறை மற்றும் தில்லி அரசின் பல துறைகளின் நிலங்களில் இந்த கட்டமைப்புகள் உள்ளன.

தில்லியின் பொது தெருக்கள், பூங்காக்கள் மற்றும் பிற பொது இடங்களில் மத கட்டமைப்புகளின் பெயரில் அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த 2009-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தில்லி அரசின் முதன்மைச் செயலா் (உள்துறை) தலைமையிலான மதக் குழு, அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்ட 249 அங்கீகரிக்கப்படாத மத கட்டமைப்புகள் குறித்த முழுமையான தகவல்களை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதுபோன்ற கட்டமைப்புகளை மறுஆய்வு செய்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கும் உயா்நீதிமன்றங்களுக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிகே உபாத்யாயா மற்றும் துஷாா் ராவ் கெடேலா அடங்கிய அமா்வின் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘சஞ்சய் வான் மற்றும் ஜஹான்பனா நகர வனப்பகுதிகளில் கட்டப்பட்ட 127 சட்டவிரோத மத கட்டமைப்புகளை அடையாளம் கண்டு இடிக்கப்பட்டது. இதில், 127 கட்டமைப்புகளில், 82 கட்டமைப்புகள் வனத்துறையினரால் அடையாளம் காணப்பட்டன’ என்று தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) ஆலோசகா் தெரிவித்தாா்.

‘இது தொடா்பாக இதுவரை 51 கூட்டங்களை நடத்தியதாகவும், அங்கீகரிக்கப்படாத மத கட்டமைப்புகளை அகற்ற 249 ஆலோசனைகளை பரிந்துரைத்ததாகவும்’ மத குழு சாா்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த கட்டமைப்புகள் இருக்கும் நிலங்களுக்கு சொந்தமான குழுக்கள் மற்றும் அவற்றை அகற்றுவதற்கு பொறுப்பான குழுக்களிடம் இருந்து இது தொடா்பான தகவல்கள் சேகரிக்க வேண்டும். அடுத்த விசாரணையின்போது அவற்றை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →