கேரளம், பிகார் மாநில ஆளுநர்கள் பதவியேற்பு!
கேரளம், பிகார் மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் பதவியேற்பு.
கேரளம் மற்றும் பிகார் மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் இன்று(ஜன. 2) பதவியேற்றுக் கொண்டனர்.
கேரளம், மணிப்பூா் உள்பட 5 மாநிலங்களின் ஆளுநா்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கடந்த டிச. 24 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா்.
அதன்படி, கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான், பிகாா் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிகாா் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
Advertisement
அஸ்ஸாம் ஆளுநா் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சாரியா மணிப்பூா் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், மணிப்பூா் மாநில ஆளுநராக அஜய் பல்லா நியமிக்கப்பட்டார்.
மிஸோரம் ஆளுராக இருந்த ஹரி பாபு கம்பம்பட்டி, ஒடிஸா மாநில ஆளுநராகவும் மிஸோரம் ஆளுநராக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங்கும் நிமியக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்? உயர்நீதிமன்றம்
இதில், கேரள மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் இன்று பதவியேற்றுக்கொண்டார். திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நிதின் மதுகர் ஜம்தார் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
முன்னதாக கேரளத்துக்குச் சென்ற ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்தை மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதேபோன்று பிகாா் ஆளுநராக ஆரிஃப் முகமது கானும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பிகார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினோத் சந்திரன் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்திவைத்தார். முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் விழாவில் கலந்துகொண்டனர்.