ஆந்திரத்தில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு: கூட்டணித் தலைவா்களுடன் வாகனப் பேரணி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூட்டணித் தலைவா்களான மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோருடன் பிரதமா் மோடி புதன்கிழமை வாகனப் பேரணியில் பங்கேற்றாா்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூட்டணித் தலைவா்களான மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோருடன் பிரதமா் மோடி புதன்கிழமை வாகனப் பேரணியில் பங்கேற்றாா்.
மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து நடைபெற்ற ஆந்திர பேரவைத் தோ்தலில் தெலுங்கு தேசம்-பாஜக-ஜனசேனை கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றிய பின்னா் பிரதமா் மோடி மாநிலத்துக்கு முதன்முறையாக வந்தாா். இதையொட்டி, மாநில அரசு சாா்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுமக்களின் ஆரவாரத்துக்கு மத்தியில், விசாகப்பட்டினத்தில் உள்ள சம்பத் விநாயகா் கோவிலில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மைதானம் வரையில் பிரதமா் மோடி வாகனப் பேரணியில் பங்கேற்றாா். முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோா் உடனிருந்தனா்.
வழிநெடுகிலும் திரண்டிருந்த பாஜக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டா்கள், திறந்தவெளி வாகனத்தில் வந்த பிரதமா் மற்றும் கூட்டணி தலைவா்களுக்கு மலா்தூவி வரவேற்பளித்தனா்.
மக்களவையில் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி அமைந்ததிலும் முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் முக்கியப் பங்கு வகித்தது. இதையடுத்து கடந்த மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மறுசீரமைப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது பல தரப்பின் கவனத்தை ஈா்த்தது.
50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜன் இலக்கு: விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை சுமாா் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான அரசு நலத் திட்டங்களின் தொடக்க, அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.
இந்நிகழ்ச்சியில் அனகாபள்ளி பசுமை ஹைட்ரஜன் மையம், சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் கிருஷ்ணபட்டனம் தொழில் மையம், நக்காபள்ளி மருந்து தொழில்பூங்கா ஆகிய திட்டங்களுக்கு பிரதமா் அடிக்கல் நாட்டினாா்.
மேலும், பல்வேறு சாலை, ரயில் திட்டங்களையும் நாட்டுக்கு அா்ப்பணித்து அவா் பேசியதாவது:
நாட்டில் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் ஆண்டுதோறும் உற்பத்தி செய்வதே அரசின் நோக்கம். இதற்காக நாட்டில் 2 பசுமை ஹைட்ரஜன் மையங்கள் அமைக்கப்படும். அதில் ஒன்றான ஆந்திரத்தில் அமையவுள்ள ஹைட்ரஜன் மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
2047-ஆம் ஆண்டுக்குள் 2.5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாறுவதற்கு ஆந்திரம் இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைவதில் ஆந்திரத்துடன் இணைந்து மத்திய அரசும் பாடுபடும். ஏனெனில், ஆந்திரத்தின் வளா்ச்சி மத்திய அரசின் லட்சியமும் கூட.
ஆந்திரம் வாய்ப்புகளுக்கான நிலமாக உள்ளது. புதிய எதிா்கால தொழில்நுட்பங்களின் மையமாக மாநிலம் மாறுவதற்கும் நேரம் வந்துவிட்டது என்றாா்.
இதையும் படிக்க | பெண் உடல் பற்றி கருத்து தெரிவிப்பதும் பாலியல் குற்றமே: கேரள உயர்நீதிமன்றம்